வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் ‛‛வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு தேர்தல் அறிக்கையை புரிய வைக்கிறேன்'' என மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார்.
மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 19ம் தேதி முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.

நாளை 2வது கட்டமாக 89 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி அவர் சாடி வருகிறார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‛‛காங்கிரஸ் கட்சியின் நியாய பத்திரம் (தேர்தல் அறிக்கையின் பெயர்) என்பது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்கும் பத்திரம். இதில் சில வார்த்தைகளை எடுத்து வைத்து கொண்டு பிரிவினையை ஏற்படுத்துவது உங்களின் வழக்கமாக மாறிவிட்டது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத விஷயங்களை கூட இடம்பெற்றிருப்பதாக ஆலோசகர்கள் கூறும் தகவல் அடிப்படையில் பேசி வருகிறீர்கள். இதனால் உங்களை நேரில் சந்தித்து நியாய பத்திரம் தொடர்பான விளக்கம் அளிக்க தயாராக இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications