மேல்முறையீடு தள்ளுபடி.. ஸ்பாட்டில் பறந்த பிடிவாரன்ட்.. கோவை இந்து முன்னணி நிர்வாகி கைது
கோவை: அரசியல்வாதிகள் என்றாலே வழக்குகள், சர்ச்சைகள் இருப்பது இயல்பு. கோவையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூர்யபிரசாத், கோவையில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை பெறப்பட்டவர் ஆவார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அவரின் மேல்முறையீட்டு மனுவை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவரை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரசாத். இவர் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்டோ டிரைவர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து கோவை காவல்துறையினர் சூர்யபிரசாத் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்காக சூர்யபிரசாத் கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தார். இந்நிலையில் கொலை முயற்சி வழக்கை கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் சூர்யபிரசாத்திற்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக சூர்யபிரசாத் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனால் அரசியலில் அவர் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்தார். அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் வட்டமடித்து கொண்டிருந்தன. சூர்யபிரசாத்தின் மேல் முறையீட்டு மனு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சூர்யபிரசாத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் சூர்யபிரசாத்திற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications