For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் 3 பேர் கொடூரமாக கொலையான சம்பவம்... சிக்கிய கூலிப்படை பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

கோவை : காரை வழி மறித்து துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை வெட்டிச்சாய்த்த கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மேலமருதக்குடியை சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் பா.ம.க. மாநில துணை தலைவராக உள்ளார். இவரது தம்பி ம.க.ராஜா. சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர்க பணியாற்றி வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஊருக்கு சென்ற போது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

3 murdered in covai. Police arrested 4

இதுதொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாலி மணிகண்டன், ராம் என்ற ராமராஜன், வடமடை அய்யப்பன், ராமசாமி, பிரகாஷ் உள்பட 12 பேரை கைது செய்தனர். இவர்கள் திருச்சி, கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இதில் முக்கியமானவர்களாக கருதப்பட்ட லாலிமணிகண்டன், ராமராஜன் ஆகியோர் சமீபத்தில் கோவை சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் லாலி மணிகண்டன் நேற்று மாலை ஜாமீனில் வெளி வந்தார். அவரை அழைத்து செல்வதற்காக அவரது அண்ணன் மகாதேவன் என்ற மாதவன், தியாகராஜன், அருண், கார்த்தி, மணி ஆகியோர் ஒரு காரில் வந்தனர். காரை தஞ்சையை சேர்ந்த ரவி என்பவர் ஓட்டினார்.

இரவு 8 மணி அளவில் அவர்கள் கோவை திருச்சி புறவழிச்சாலையில் சிங்காநல்லூர் தாண்டி சிந்தாமணி புதூர் அருகே சென்ற போது 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த 13 பேர் கும்பல் இவர்களது காரை வழிமறித்தது. அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டனர். மேலும் காரில் இருந்தவர்களை அரிவாளால் வெட்டினர்.

இதில் தியாகராஜன், அருண் ஆகியோர் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பலியாயினர். மாதவன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். அவரை கும்பல் விடாமல் துரத்தி வெட்டியதோடு, அவரது தலையை துண்டித்தனர்.

இந்த சம்பவத்தில் கார் டிரைவர் ரவி மார்பில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். லாலி மணிகண்டன் உள்பட 3 பேர் தப்பி ஓடி இருள் சூழ்ந்த இடத்தில் மறைந்து உயிர் தப்பினர். உடனே கொலையாளிகள் காரில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

கொலை பற்றிய தகவல் அறிந்ததும் கோவை சரக டி.ஐ.ஜி. ஆயுஷ் மணி திவாரி, காவல் கண்காணிப்பாளர் சுதாகர், கோவை மாநகர காவல் துணை ஆணையர் ரம்யபாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் வழக்கறிஞர் ராஜா கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக இந்த கொலைகள் நடந்திருப்பது தெரிய வந்தது. சிதம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் தலைமையிலான கூலிப்படை தான் இந்த சம்பவத்தை திட்டமிட்டு செய்துள்ளது.

லாலி மணிகண்டன் நேற்று ஜாமீனில் வெளிவருவதை அறிந்த கும்பல் அவரை குறி வைத்து தான் கொலை திட்டத்தை வகுத்துள்ளனர். அதன்படி நேற்று மாலை லாலி மணிகண்டன் கோவை சிறையில் இருந்து வெளி வந்தது முதல் அவரது காரை கண்காணித்து பின்தொடர்ந்து சென்று கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

கொலையாளிகள் வைத்த குறியில் இருந்து லாலி மணி கண்டன் தப்பித்து விட்டார். ஆனால் அவரது அண்ணன் மாதவன் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுவிட்டனர்.
கொலையாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகள் காரில் தப்பிய தகவல் அறிந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதில் பல்லடம் அருகே ஒரு காரில் வந்த 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் நடந்த கொலையில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பல்லடம் போலீசார் அவர்கள் 4 பேரையும் கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தனிப்படை போலீசார் 4 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். டி.ஐ.ஜி. ஆயுஷ் மணி திவாரி இன்று சூலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, பிடிபட்டவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அவர்கள் திருவிடைமருதூரை சேர்ந்த அப்பு என்கிற சுந்தரமூர்த்தி, விவேக், சரவணன், ராஜேஷ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் கொலைக் கும்பல் பற்றிய முழு தகவல்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. தலைமறைவான கூலிப்படை கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கவலைக் கிடமாக உள்ள கார் ஓட்டுநர் ரவி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மார்பில் பாய்ந்த குண்டுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
3 murdered in covai. Police arrested 4
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X