For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் கடன் சுமை 4.48 லட்சம் கோடி.. இதுதான் ஜெயலலிதா அரசின் சாதனையா? கருணாநிதி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 4 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். திமுக ஆட்சியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய போது ஜெயலலிதா பேசிய பேச்சு என்ன? சொன்ன காரணங்கள் என்ன? மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா? இதுதான் அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமைக்கு சாட்சியா? என திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 23-6-2016 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா துறைவாரியாக தங்கள் ஆட்சியில் என்னென்ன காரியங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்ற விவரத்தையெல்லாம் தொகுத்து வழங்கினார்.

karunanidhi Accusation on ADMK government

11-1-2010 அன்று இதே ஜெயலலிதா ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பேசும் போது, "ஏற்கனவே கற்பனை செய்து பார்க்க முடியாத, தாங்கிக் கொள்ள முடியாத கடன் சுமையில் தமிழ்நாடு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு 31 மார்ச் வரை அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 56,094 கோடி ரூபாய்.

2009-2010ஆம் ஆண்டிற்கான தி.மு.க. அரசின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஒட்டுமொத்தக் கடன் சுமை 85,395.84 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கடன் சுமை 90,000 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் தலா 15,000 ரூபாய் கடன் உள்ளது என்று பொருள். இதற்கு என்ன பொருள் என்றால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும், தலா 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது என்று பொருள்படுகிறது" என்றெல்லாம் பேசினார்.

ஜெயலலிதா இவ்வாறு பேசிய பிறகு, 2011இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து அவர்கள்தான் ஆளுங்கட்சியாக இருந்து தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறார்கள். தமிழக அரசின் கடன் சுமையை எந்த அளவுக்குக் குறைத்துள்ளார்கள்? ஒவ்வொரு வரின் கடன் சுமையை எந்த அளவுக்குக் குறைத்துள்ளார்கள்?

தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 1,00,101 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பேரவையில் ஜெயலலிதா பேசினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து இவ்வாறு கூறிவரும் நிலையில், தமிழ்நாட்டின் உண்மையான நிதிநிலை என்ன? என்பதை ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தியிருக்கிறது. "தமிழகத்தின் தொழில் உற்பத்தி தொடர்ந்து சரிகிறது, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கிறது" என்பதே ரிசர்வ் வங்கி கூறும் செய்தி.

மாநிலங்களின் நிதிநிலை குறித்த கையேட்டை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக ஆய்வுசெய்துள்ள ரிசர்வ் வங்கி, இந்தியா வில் நிதிப் பற்றாக்குறை அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாகக் கூறி யுள்ளது.

2015-16ஆம் ஆண்டில், தமிழகத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.31,870 கோடியாகும். உத்தரப்பிரதேசம் ரூ.31,560 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், மராட்டியம் ரூ.30,730 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் பெரிய பணக்கார மாநிலம் மராட்டியம்தான். அம் மாநிலத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பு நிலையான விலை மதிப்பின் அடிப்படையில் ரூ.9.47 லட்சம் கோடியாகவும், தற்போதைய விலை மதிப்பின் அடிப்படையில் ரூ.16.86 லட்சம் கோடியாகவும் உள்ளது.

ஆனால், தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு முறையே ரூ.5.15 லட்சம் கோடியாகவும், ரூ.9.74 லட்சம் கோடியாகவும் உள்ளது. எவ்வகையில் பார்த்தாலும் மராட்டியத்தைவிட பாதியளவே உள் நாட்டு உற்பத்தி மதிப்புகொண்ட தமிழகம், மராட்டிய மாநிலத்தைவிட அதிக நிதிப் பற்றாக்குறையைக் கொண்டிருப்பது திறமையான நிதி நிர்வாகத்துக்கு அடையாளம் அல்ல. இது தமிழகத்துக்குப் பின்னடைவு.

2014-15ஆம் ஆண்டில், மராட்டியத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.37,250 கோடி ஆகும். இது, 2015-16ஆம் ஆண்டில் 17.5 சதவிகிதம் சரிந்து ரூ.30,730 கோடியாக குறைந்துள்ளது. இதுதான் நல்ல நிதி நிர்வாகத்துக்கு அடையாளமாகும். ஆனால், தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை 2014-15ஆம் ஆண்டில் ரூ.27,350 கோடியில் இருந்து 2015-16ஆம் ஆண்டில் ரூ.31,870 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவுகளுக்கும், மொத்த வரவுகளுக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கியாக வேண்டும். ஒரு மாநிலத்தின் கடன் அளவை குறைக்க வேண் டும் என்றால், நிதிப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும். அந்தவகையில் மராட்டிய அரசு வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இவ்விஷயத்தில் தமிழகம் தோல்வியடைந்து விட்டது. இனிவரும் ஆண்டு களில் தமிழகத்தின் மொத்த கடன்சுமை அதிகரிப்ப தற்குத்தான் இது வகைசெய்யும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டு நேற்றையதினம் அறிவித்து விட்டது. அதைப் பின்பற்றி தமிழகத் திலும், தமிழக அரசின் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் கடன் மேலும் அதிகரிக்கும். நிதி நிர்வாகத்தை அரசு மேம்படுத்தா விட்டால் அடுத்த சில ஆண்டுகளில் மீளமுடியாத கடன்சுமையில் தமிழகம் சிக்குவது உறுதி. ஆனால், இந்த ஆபத்திலிருந்து தமிழகத்தைக் காப்பதற்கான எந்த முயற்சியையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ள வில்லை.

அதேபோல், மற்ற துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைவதற்கான அறிகுறிகள் தென்பட வில்லை. தமிழகம் மின்மிகை மாநிலமாகி விட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறிவருகிறார். ஆனால், மற்ற மாநிலங்களில் இருந்தும், தனியாரிட மிருந்தும் அதிக விலைக்கு தமிழக அரசு மின்சாரத்தை வாங்கும் போதிலும், 69 கோடி யூனிட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.

கடந்த 5 ஆண்டு ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு எந்தவகையிலும் முன்னேற்றம் அடைய வில்லை. 2011ஆம் ஆண்டில் ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் நேரடிக் கடனை இப்போது ரூ.2.47 லட்சம் கோடியாகவும், மறைமுகக் கடனையும் சேர்த்து ஒட்டுமொத்தக் கடனை ரூ.4.48 லட்சம் கோடியாகவும் உயர்த்தியதுதான் ஜெயலலிதா அரசின் முதல் சாதனையாகும்.

புதிய தொழில் தொடங்க அனுமதியளிப்பதற்கு கையூட்டுப் பெறுவதில் இந்தியாவிலேயே முதலிடத் தில் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்று நந்தன் நிலேக்கனி தலைமையிலான தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழு சான்றளித்தது இரண்டாவது சாதனை.

ஆங்கில நாளிதழ் தயாரித்த மாநிலங்களின் நிலைமை குறித்த தர வரிசைப் பட்டியலில் ஒட்டு மொத்த வளர்ச்சியில், இந்தியாவிலுள்ள 21 பெரிய மாநிலங்களில் 20ஆவது இடத்தைப் பிடித்தது, தனிநபர் கடன் சுமையில் தமிழகத்தை முதலிடம் பிடிக்கவைத்தது என ஜெயலலிதாவின் சாதனைகளை கூறலாம். அந்தவகையில் இப்போது நிதிப் பற்றாக்குறையில் இந்திய அளவில் முதலிடம் பிடிக்கவைத்திருப்பது ஜெயலலிதாவின் இன்னொரு சாதனை ஆகும்.

மின் வாரியம் போன்ற அரசுத் துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களையும் சேர்த்தால் தமிழக அரசின் கடன் சுமை 4 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். கழக ஆட்சியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய போது ஜெயலலிதா பேசிய பேச்சு என்ன? சொன்ன காரணங்கள் என்ன? வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வாங்கிக் கொடுத்ததால்தான் கடன் சுமை ஏற்பட்டது என்று பேசினாரே, தற்போது அவர் வாங்கி வைத்துள்ள கடன்சுமைக்கு அவர் அளிக்கப் போகும் பதில் என்ன? மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா? இதுதான் அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமைக்கு சாட்சியா? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMk chief karunanidhi Accusation on TN chief minister jayalalithaa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X