புதுசா வருபவர்களுக்கு.. இனி பதவி எல்லாம் கிடையாது.. கண்டிப்பாக சொன்ன விஜய்.. கடுப்பான அதிமுக தலைகள்
சென்னை: அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பல அதிமுக தலைகள் தவெகவிற்கு தயாராக உள்ளனராம். ஆனால் இவர்களுக்கு விஜய் செக் ஒன்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 மாஜி எம்எல்ஏக்களும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை நேரில் சந்தித்து தங்களது பதவிகளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைகளுக்கு இடம் தராமல், தார்மீக அடிப்படையில் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்பின் தவெகவில் இணைந்தனர்.
வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் இந்த 6 தலைவர்களும் தவெகவின் சின்னத்திலேயே நேரடியாகக் களம் காணவிருக்கிறார்கள்.
இரண்டு 'விஜயபாஸ்கர்'-களுக்கு அமைச்சரவையில் இடமா?
தலைமைச் செயலக மற்றும் தவெக அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக், அமைச்சரவை விரிவாக்கம் பற்றியதுதான். தவெகவில் இணைந்துள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் தவெக அமைச்சரவையில் முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்களது நீண்டகால நிர்வாக அனுபவத்தையும், அரசியல் செல்வாக்கையும் தவெக அரசின் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படுத்திக்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கியூவில் நிற்கும் அடுத்தடுத்த விக்கெட்டுகள் - மெகா வரவேற்பு!
ஆரம்பக் கட்டமாக 6 எம்எல்ஏக்கள் தவெகவில் ஐக்கியமாகியுள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம்தான் என்ற அதிரடித் தகவல் தற்போது கசிந்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மேலும் பல முக்கிய மாவட்டச் செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளும் தவெகவை நோக்கி நகரத் தயாராகி வருகின்றனர்.
இவ்வாறு அடுத்த அலையாகத் தவெகவில் இணையக் காத்திருக்கும் மாற்றுக்கட்சித் தலைவர்களை பிரம்மாண்டமான முறையில் வரவேற்க முதலமைச்சர் விஜய் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார். இதனால், சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசையில் மேலும் சில ராஜினாமாக்கள் கியூவில் வரிசைகட்டி நிற்பதாக கூறப்படுகிறது.
"பதவிகளை எதிர்பார்க்காதீர்கள்" - விஜய் கறாரான கடுகடு எச்சரிக்கை!
ஆனால் மாற்றுக்கட்சியினர் தவெகவை நோக்கி படையெடுத்து வரும் அதே வேளையில், கட்சித் தலைவர் விஜய் அவர்களுக்கு மிகத் தெளிவான, கறாரான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னிடம் பேசிய மூத்த நிர்வாகிகளிடம், "ஏற்கனவே வந்தவர்கள் தவிர.. இனி கட்சிக்குள் வரும் புதியவர்கள் எவரும் உடனடியாக பெரிய அமைச்சரவைப் பதவிகளையோ, கட்சியில் பெரிய பொறுப்புகளையோ அல்லது தங்களின் செல்வாக்கைக் காட்டும் பிரம்மாண்ட போஸ்டுகளையோ எதிர்பார்க்கக் கூடாது" என்று விஜய் கறாராகக் கூறிவிட்டாராம்.
கட்சியின் ஆரம்பக் காலத்திலிருந்து உழைத்த தொண்டர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். "களத்தில் இறங்கி மக்களுக்காக உழைத்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களுக்கு மட்டுமே தகுதியான நேரத்தில் தகுதியான அங்கீகாரம் வழங்கப்படும்" என்ற விஜய்யின் இந்த அதிரடி உத்தரவு, தவெகவுக்குள் வரத் துடிக்கும் அடுத்த கட்ட மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
அடுத்தடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் தமிழக அரசியலின் திசையை முழுமையாக மாற்றியமைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications
