தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன்-விவேகானந்தரை மிரட்டிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
சென்னை: திராவிடர் பேரியக்கத்தின், தமிழ்நாட்டின் தந்தையாக போற்றப்படுகிறவர் தந்தை பெரியார். அவர் 13 வயது சிறுவனாக ஈரோடு தெருக்களில் அலைந்து திரிந்த போது திராவிட சித்தாந்தம் குறித்த எந்த சிந்தையும் இல்லாத காலத்தில் சுவாமி விவேகானந்தரிடம், தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என நெஞ்சை நிமிர்த்து கர்ஜித்த பெருந்தகையாளர்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை.
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அல்லது மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை அல்லது மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த நாள் ஏப்ரல் 4 (1855). 168 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை இன்றைக்கும் தமிழ் நிலமும் தமிழர் வாழ்வும் உள்ளவரைக்கும் என்றைக்கும் போற்றப்படுவார்... ஏனெனில் அவர் படைத்ததுதான் இன்று தமிழ்நாட்டு அரசின் தமிழ்த் தாய்வாழ்த்துப் பாடல்.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

என நிலமெங்கும் தமிழர் வாழும் தரணி எங்கும் ஒலிக்கிறதே இந்த தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை கி.பி.1891-ம் ஆண்டு எழுதினார் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை. அவரது மனோன்மணீயம் எனும் பாயிரத்தில் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது. 1970-ம் ஆண்டு திராவிடர் இயக்கத்தின் நீட்சியான திமுக ஆட்சிக் காலத்தில் சில பகுதிகள் சுருக்கப்பட்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவால் தமிழ்நாட்டு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக அங்கீகாரம் பெற்றது.
இத்தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடும் என்ற வாழ்த்து இப்போதும் உள்ளது. ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! என்ற வரிகள் சுருக்கப்பட்டிருக்கின்றன. இதை நாம் சுட்டிக்காட்டுவது ஏன் எனில், திராவிடம் - ஆரியம் என்பது எல்லாம் "வந்தேறி" "வடுக" திராவிடக் கூட்டம் கண்டுபிடித்தது என்று கண்மூடித்தனமாக மந்தைகளைப் போல பேசுவோருக்குதான். ஏனெனில் திராவிடக் கூட்டம் புறப்படுவதற்கு முன்னர், அதாவது பெரியார் 13-வயது சிறுவனாக இருந்த போதே திராவிடம், ஆரியம் எனும் கோட்பாட்டின் புரிதலைக் கொண்டவராக தமது படைப்புகளில் ஆணித்தரமாக பதிய வைத்தவர் சுத்த தமிழர், தூய தமிழர், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைதான்.
இந்துத்துவா சித்தாந்தத்தின் அடையாளங்களில் ஒருவராக சுவாமி விவேகானந்தர் இன்று முன்னிறுத்தப்படுகிறார். கி.பி.1892-ம் ஆண்டு அமெரிக்கா பிரசங்கத்தை நிறைவு செய்த பின்னர் சுவாமி விவேகானந்தர் திருவனந்தபுரம் வருகிறார். அப்போது மனோன்மணியாரையும் விவேகானந்தர் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பு தொடர்பாக தன் குறிப்பு புத்தகத்தில் எழுதி இருப்பது என்ன தெரியுமா?
"உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்ற் வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில் வினாவினைக்கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில் எனக்கும் கோத்திரத்திற்கும் சம்பந்தம் ஒன்றும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான் என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்".. இப்படித்தான் பொட்டில் அடித்தாற் போல பெரியாருக்கு முந்தைய தலைமுறையான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையார் பிரகடனம் செய்தார். விவேகானந்தருக்கும் மனோன்மணியம் சுந்தரனாருக்குமான உறவு திடமானது.
ஆகையால்தான்
"சுந்தரம்பிள்ளை பேரறிவாளர், பேருண்மைகளைக் காதலித்து, அதைப் பிறருக்கு எடுத்துரைக்கும் பேராற்றல் வாய்ந்தவர்.
அன்பிற்குப் பாத்திரமானவரை ஆண்டவன் அற்ப ஆயுளிலேயே ஆட்கொண்டு விடுவான் என்பதற்குச் சுந்தரம் பிள்ளையின் மறைவே
சான்று பகரும்'' என்று சுவாமி விவேகானந்தர் இரங்கல் செய்தி அனுப்பினார். ஆனால் சுவாமி விவேகானந்தரும் கூட 39-வது வயதில் ஜென்மம் நிறைந்த வாழ்வை நிறைவு செய்தார்.
கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரர் தமது 'செளந்தர்யலகரி' (அழகின் அலைகள்) என்ற நூலில் 'திராவிடச் சிசு' என்று குறிப்பிட்டது ஞான சம்பந்தரைத்தான் என அறுதியிட்டுச் சொன்னதும் சாட்சாத் மனோன்மணீயம் சுந்தரனார்தான்.
நூற்றாண்டு கண்ட திராவிடர் பேரியக்கம், அதன் நீட்சியான இன்றைய திராவிட மாடல் அரசு என அத்தனைக்குமான அடிக்கட்டுமானங்களில் ஒருவராக பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் வரலாற்றின் பக்கங்களில் திகழ்ந்தார். அதனாலேயே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என திமுக ஆட்சிக் காலத்தில் நெல்லையில் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.

-------------------------------------------------------------------------------
கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர்.
தொழில் சம்மந்தமாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழாவில் குடியேறியவர்கள் பெருமாள்பிள்ளை, மாடத்தியம்மாள் தம்பதியினர்.
இவர்களின் மகனாக ஆலப்புழாவில் 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் பிறந்தவர் 'மனோன்மணீயம்' பெ.சுந்தரம்பிள்ளை.
தமிழ் மொழி இயல், இசை, கூத்து என மூன்று பிரிவுகளைக் கொண்டது.கூத்து என்பது நாடக வடிவத்தின் பெயர்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
- என்பது தொல்காப்பியம்.
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்
- என்கிறது பட்டினப்பாலை.
பார்த்து மகிழ்வதற்கு மட்டுமன்று நாடகம்.படித்து இன்புறவும் முடியும் என்பதைத் தன் மனோன்மணீயம் நாடகக் காப்பியத்தால் நிறுவிக் காட்டினார் சுந்தரம்பிள்ளை.
லிண்டன் பிரபு எழுதிய 'இரகசிய வழி' (The secret Way) என்ற நூலின் மூலக் கருவைத் தழுவி எழுதப்பெற்ற மனோன்மணீயம் வெளிவந்த ஆண்டு 1891.
இந்நூலுள் 'சுந்தரமுனிவர்' என்ற ஒரு கதை மாந்தரை உருவாக்கி உலவ விட்டிருப்பார்.அவர் பேரசிரியர் சுந்தரம்பிள்ளையின் மதிப்பு வாய்ந்த ஆசான்களில் ஒருவரான கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளை மனதில் இருத்தி, உருவாக்கப் பட்ட படைப்பு-.
கோடக நல்லூர் சுந்தரசுவாமி, கைக்கோட்டு ஐயாறு சாமி, நாராயணகுரு, சட்டாம்பி சுவாமி போன்ற சாமியர்கள் சிலர் இவரின் நண்பர்கள் என்பதனால், இவர் சைவத்தின் மீது நாட்டம் கொண்டும், அதற்கான ஆய்வுகளின் மீதும் நாட்டம் கொண்டும் இருந்தார் என்பதில் வியப்பேதும் இல்லை.
பத்துப்பாட்டு நூல் தொகையில் புலவர் நக்கீரர் எழுதிய 'திருமுருகாற்றுப்படை', 'நெடுநல்வாடை', மாங்குடி மருதனார் எழுதிய 'மதுரைக்காஞ்சி' ஆகிய மூன்று நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை.
அவை The Ten Tamil Ideas என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
பத்துப்பாட்டு குறித்த மிகச் சிறந்த ஆய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிடச் செய்தார்.
இவர் தன் இளம் பருவத்தில், தமிழ்ப் புலவரான இவரின் தந்தையார் பெருமாள்பிள்ளையிடம் திருக்குறள், மூதுரை, பழமொழி, சிறுபஞ்சமூலம் போன்ற அறநூல்களைப் பழுதில்லாமல் படித்துள்ளார்.
பின்னர் தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் ஆசிரியர் நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளையிடம் முறைப்படி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார்.
தேவார திருவாசகத்தையும் இளமையிலேயே தெளிவுறப் படித்திருக்கிறார்.
1877ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
1877ஆம் ஆண்டு 'திருநெல்வேலி ஆங்கில - தமிழ் கல்விச்சாலை'யின் தலைமை ஆசிரியரானார்.
இந்தக் கல்விச்சாலை பின் வந்த காலங்களில் 'இந்து கல்லூரி'ஆக மாறக் காரணமாக இருந்தவர் சுந்தரம்பிள்ளை.
அவர் முதுகலைப் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து 'திருவனந்தபுரம் பாலராம வர்மர் மகாராஜா கல்லூரி'யில் தத்துவத்துறை ஆசிரியராகப் பணியமர்த்தப் பெற்றார்.
இக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர், திருவனந்தபுரம் அரண்மனையில், அரண்மனைத்துறைத் தனி ஆணையராக மன்னரால் அமர்த்தப் பெற்றார்.
1855ஆம் ஆண்டில் மீண்டும் மன்னர் கல்லூரியில் தத்துவத்துறைத் தலைமைப் பேராசிரியர் பெறுப்பேற்றார்.
இந்திய - மேற்குலகத் தத்துவம், வரலாறு, தொல்பொருளியல், கல்வெட்டு ஆய்வு, இலக்கண - இலக்கியம், நவீன அறிவியல் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர் சுந்தரனார்.
'திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி' என்ற இவரின் ஆய்வு நூல் 1894ஆம் ஆண்டு வெளியானது.
நற்றொகை விளக்கம், திருவிதாங்கூர் பண்டைய மன்னர்களின் கால ஆராய்ச்சி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைச் சுந்தரனார் எழுதியிருக்கிறார்.
இவரின் மனோன்மணீயத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டவர் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.மூன்றாம் பதிப்பு சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால் வெளியிடப் பெற்றது. தொடர்ந்து 25 திற்கும் மேற்பட்ட பதிப்புகளில் இந்நூல் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது
அடியேன் கடையேன் அறியாச் சிறியோன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனும் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைவிந் நாடகம்
வெள்ளிய தெளினும் விளங்குறின் களைக்காற்
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பெ குறியெனக் குறித்தே
- மனோன்மணீயம் பாயிரத்தில் வரும் இந்த வரிகள் சுந்தரனாரின் தமிழ் வேட்கையைத் தெள்ளெனக் காட்டுகிறது.
"ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழியா நின் சீரிளமைத் திறம்வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே" என்று தமிழின் சீரிளமையை விதந்து போற்றும் ஆசிரியர், ஆரியம் உலக வழக்கு அழிந்து ஒழிந்தது என்பதையும் மறக்காமல் சுட்டிக்காட்டியிருப்பது, இன்றைய சூழலில் முதன்மை பெறுகிறது.
இன்னும் ஒருபடி மேலே சென்று 19-12-1896 ஆம் நாளில் சுந்தரனார் அவரின் நண்பர் ஜே.எம்.நல்லுசாமி பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் இப்படி எழுதியிருக்கிறார் :
"Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidianor Tamilian at the bottom". (பொதுவாக ஆரியத் தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த் தத்துவமே உள்ளது என்பது பேருண்மை.)
'மனோன்மணீயம்' ஆசிரியர், பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் 'இராவ்பகதூர்' பட்டம் பெற்றவர்.
இவரின் மகன் நடராச பிள்ளை பின்னாளில் கேரளவின் அமைச்சராக இருந்திருக்கிறார்.
1897ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26ஆம் நாள் பேராசிரியர் சுந்தரனார் அவர்கள், தன் 42ஆம் அகவையில் இயற்கை ஏய்தினார்.(நன்றி கீற்று இணையதளம்).
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications