டிரம்ப் வரியால் திருப்பூருக்கு கொண்டாட்டம் தான்..இதுல இப்படி ஒன்னு இருக்கோ.! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் என எந்தவொரு நாடும் டிரம்பின் வரி விதிப்பில் இருந்து தப்பவில்லை. இருப்பினும், இந்த வரியால் இந்தியாவுக்கு சில நன்மைகள் இருப்பதாகப் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
வெள்ளை மாளிகையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கையில் சார்ட் ஒன்றுடன் வந்த டிரம்ப், உலகின் எந்த நாட்டின் மீது எவ்வளவு வரி என்பதை விவரித்தார். 10% முதல் 50% வரை வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி அறிவித்துள்ளார்.

டிரம்பின் வணிக போர்
டிரம்பின் இந்த வரி அறிவிப்பை கிட்டதட்ட வணிக போர் என்றே வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. அதேநேரம் டிரம்பின் இந்த வரி அறிவிப்பால் இந்தியாவுக்கு என்ன ஆகும். எதாவது துறைக்கு பாசிட்டிவாக இருக்குமா என்பது குறித்த விவரங்களைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "உலகின் அனைத்து நாடுகள் மீதும் டிரம்ப் வரியை அறிவித்துள்ளார். சில நாடுகள் மீது 50% வரை கூட இறக்குமதி வரியை அறிவித்துள்ளார். அடிப்படையாக எல்லா நாடுகள் மீதும் 10% வரி போட்டுள்ளார். அதற்கு மேல் இந்தியா மீது 26% வரி போட்டுள்ளார். வியட்நாம் மீது 45%, தாய்லாந்து மீது 36%, தைவான் மீது 32%, சீனா மீது 34% வரி போட்டுள்ளார். சீனா மீதான அனைத்து வரிகளையும் சேர்த்தால் 53% வரி.
இந்தியாவுக்கு 26% வரியைப் போட்ட டிரம்ப், இந்தியாவுக்குச் சலுகை காட்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அடிப்படை வரி 10% வேறு இருக்கு. அதேநேரம் இந்தியாவுக்கு மொத்தமே 26% வரி தானா.. இல்லை 10+ 26 மொத்தம் 36% வரியா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது நாட்கள் செல்ல செல்லவே தெளிவாகத் தெரிய வரும்.
தங்கம் உயரும்
படிப்படியாகவே இந்த வரி அமலுக்கு வரும் எனக் குறிப்பிட்டுள்ளார். 10% வரி ஏப்ரல் 6 முதல் அமலுக்கு வரும் சூழலில், கூடுதல் வரி ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிரதமர் மோடி தனக்கு நல்ல நண்பர் தான் என்ற போதிலும் இந்தியா தங்களை நன்றாக நடத்துவதில்லை என டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் தங்கம் விலை உயரலாம்
யாருக்கு நல்ல செய்தி
அதேநேரம் டிரம்பின் வரி விதிப்பில் இருந்து மருத்துவ ஏற்றுமதி, செமி கண்டெக்டர், காப்பர், தங்கம், சில்வர், எனர்ஜி உள்ளிட்ட துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது முக்கியம். இந்தியாவில் இருந்து பல நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. இது மருத்துவ நிறுவனங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு. குறிப்பாக உதிரிப் பாகங்கள் ஏற்றுமதி. பல நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

திருப்பூருக்குக் கொண்டாட்டம்
மறுபுறம் டிரம்பின் இன்னொரு வரி அறிவிப்பு திருப்பூருக்குக் கொண்டாட்டமாக இருக்கும். ஏனென்றால் திருப்பூருக்கு வெறும் 26% மட்டுமே வரி. நமக்குப் போட்டியாக இருக்கும் வியட்நாமிற்கு 46%, வங்கதேசத்திற்கு 35%, சீனாவுக்கு 34% வரி போட்டுள்ளனர். நமக்கு சுமார் 10% வரை வரி குறைவு. இந்த கரன்சி அட்வான்டேஜ் நமக்கு நன்மை. வங்கதேசத்தில் ஏற்கனவே உள்நாட்டுக் குழப்பம் இருக்கும் சூழலில், இது இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பை தரும். மருத்துவம் மற்றும் டெக்ஸ்டைல் துறைக்கு நல்ல செய்தி!
ஐடி துறைக்கும் சிக்கல் தான். பங்குச்சந்தையில் பல நிறுவனங்களின் விலை சரிந்துள்ளது. அது மேலும் சரிய வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும். இதனால் நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்றார். அதாவது டிரம்பின் வரி அறிவிப்பால் இந்தியாவின் ஆடோமொபைல் மற்றும் ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும் டெக்ஸ்டைல் மற்றும் மருத்துவத் துறைக்கு இது நன்மை என்றும் ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப்
முன்னதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வரி விவரங்களை அறிவித்தார். அமெரிக்காவுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதற்காகவே இந்த வரி விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், மற்ற நாடுகள் அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படி விதிக்கவில்லை என்றும் சலுகை காட்டியே வரியை விதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்கா ஃபர்ஸ்ட் என்பதே தனது கொள்கை என்ற அவர், வரியைத் தவிர்க்க விரும்பும் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தி செய்யத் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எல்லாவற்றையும் விட வரிகள் விதிக்கப்பட்ட இந்த நாளை டிரம்ப் விடுதலை நாள் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாடுகளுக்கு எவ்வளவு வரி
சீனா 34 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், தென் கொரியா: 25 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், தைவான் 32 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம், சுவிட்சர்லாந்து 31 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், மலேசியா 24 சதவீதம், கம்போடியா 49 சதவீதம், பிரிட்டன் 10 சதவீதம், தென்னாப்பிரிக்கா 30 சதவீதம், பிரேசில் 10 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல சிங்கப்பூர் 10 சதவீதம், இஸ்ரேல் 17 சதவீதம், பிலிப்பைன்ஸ் 17 சதவீதம், சிலி 10 சதவீதம், ஆஸ்திரேலியா 10 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம் சதவீதம், துருக்கி 10 சதவீதம், இலங்கை 44 சதவீதம், கொலம்பியா 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர உலகின மற்ற நாடுகள் மீது எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை அமெரிக்க வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
டிரம்பின் இந்த வரி விதிப்பிற்கு பல்வேறு உலக நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல் நாடாகக் கனடா அமெரிக்க இறக்குமதிகளுக்குப் பதிலடி தரும் வரிகளை அறிவித்துள்ளன. மற்ற நாடுகளும் விரைவில் பதிலடி தருவோம் எனக் கூறி வருகின்றன.












Click it and Unblock the Notifications