தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி பேரம்.. திருநாவுக்கரசுவின் டிரைவரும் கைது! நடந்தது என்ன?

  • சென்னை: தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐபிடிஎஸ் திருநாவுக்கரசுவின் வாகன ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெக, கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை நடத்தி வருகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து இதுவரை 6 பேர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், தவெக பெரும்பான்மையை பெறுவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

    Advertisement

    இந்த பரபரப்பான சூழலில் தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவை தொடர்பு கொண்டு சென்னையை சேர்ந்த யூடியூபரான திருநாவுக்கரசு உங்களுக்கு ரூ.35 கோடி பணம் தருகிறோம். நீங்கள் அதை வாங்கி கொண்டு, கொறடா உத்தரவை மீறி சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என்று ஆசை காட்டியதாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.

    சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும், ஒருவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். திருநாவுக்கரசுவின் கார் டிரைவரான கிருஷ்ணா என்பவர் தற்போது கைதாகியுள்ளார்.

    Advertisement

    தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும் நேரில் வரவழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீசார் செந்தில் பாலாஜி பூர்வீக வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சம்மனை வழங்கிய நிலையில் நாளை இருவரும் ஆஜர் ஆவார்களா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

    இன்னொரு பக்கம் அசோக் குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையும் நாளை நடைபெற உள்ளது. இத்தகைய பரபரப்புக்கு இடையே, தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசியதாக மேலும் ஒருவர் கைதாகியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TVK MLA: Police have arrested Krishna, the driver of IPTDS Thirunavukkarasu, in connection with the alleged bribery attempt involving Uthangarai TVK MLA. With this latest arrest, the total number of people held in the case has risen to eight. The investigation is continuing, and police are probing the wider conspiracy behind the alleged attempt to influence the MLA.