Assembly Live: சட்டசபை நேரலை ஒளிபரப்பு.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு! வெளியானது புதிய டெண்டர்
சென்னை: தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யும் விவகாரத்தில் தனியாருடன் ஒப்பந்தம் மேற்கொள்ள தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த டெண்டரில், 2027 ஜனவரி முதல் 2028 டிசம்பர் வரை இரண்டு ஆண்டுகளுக்கு கவரேஜ் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் தடையின்றி நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கான தொழில்நுட்பப் பணிகளுக்காக இந்த டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மல்டி கேமராக்கள் மூலமாக முழுமையாக கவரேஜ் செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

தமிழக சட்டசபை நேரலை
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு சட்டசபை கூட்டத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முழு அமர்வும் முழுமையாக நேரலை ஓளிபரப்பு செய்யப்பட்டது. தமிழக அரசின் டிஐபிஆர் யூடியூப் சேனலில் நேரலை வழங்கப்பட்டது.
சட்டசபை நேரலை ஒளிபரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. தங்கள் தேர்வு செய்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை நேரடியாக பார்க்க முடிகிறது என்பதால் நேரலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது மக்களின் கருத்தாக இருந்தது. இந்த சூழலில்தான் தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.
டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு
இதற்கான டெண்டரை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகளை 2027 ஜனவரி முதல் 2028 டிசம்பர் வரைக்கும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அதி நவீன மல்டி லெவல் கேமராக்கள் கொண்டு முழுமையாக கவரேஜ் செய்வதோடு தொலைக்காட்சி சேனல்களில் நேரலை செய்யக்கூடிய அளவுக்கு மாற்றி தர வேண்டும் என்று டெண்டரில் கூறப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டுக்கு 80 நாட்கள் என மொத்தம் 160 நாட்கள் வீடியோ பதிவு செய்ய வேண்டும். சட்டசபையில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பேசுவதை தனியார் நிறுவனம் வீடியோவாக பதிவு செய்ய வேண்டியிருக்கும். அதற்கு பிறகு செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதை நேரலைக்கு வழங்குவார்கள் என்று தெரிகிறது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழக சட்டசபையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி வைக்கப்படும். அதன்பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், சிறப்பு கூட்டத்தொடர் உள்ளிட்டவைகள் நடைபெறும். இந்தக் கூட்டத்தொடர் அனைத்தையும் முழுவதுமாக நேரலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
அதேநேரத்தில், சட்டசபையில் அமளி ஏற்படும் போது ஆளும் கட்சி பக்கம் கேமரா திரும்புவது இல்லை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை மட்டுமே காட்டுவதாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில்தான், சட்டமன்ற நேரலை தொடர்பான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதேநேரத்தில் நேரலை செய்யப்படுவதால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் உரைகளும் வெளியில் சென்றுவிடுவதால், இவ்விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் நேரலை தொடர்பாக டெண்டர் வெளியாகியுள்ளது.




Click it and Unblock the Notifications
