திருப்பரங்குன்றம்: "விஜய் அரசு தமிழ்நாட்டிற்கு அவமானத்தை தேடிக் கொடுத்துவிட்டது"- ஸ்டாலின் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க அரசு. விஜய் அரசு, தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது" என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய தூண் மீது, நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதற்காக மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவிலிருந்து எல்லா திசைகளிலும் குறைந்தது 50 மீட்டர் தொலைவில், பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து, இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைத்து தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

Thiruparankundram

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு, இந்த வழக்கில் தோல்வி அடைந்துள்ளது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.

'மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்' என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க அரசு.

திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.

அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.

முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.

இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.

நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+