470ஆவது கந்தூர் விழா! நாகூர் தர்காவில் இன்று இரவு கொடியேற்றம்! கண் கவர் விளக்குகளால் அலங்காரம்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி திருவிழா இன்று இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
கந்தூரி விழாவை முன்னிட்டு தர்கா முழுவதும் பல்வேறு வண்ணங்களில் மின்னலங்காரம் செய்யப்பட்டு, இரவு நேரத்தில் கண்கவர் ஒளியில் ஜொலித்து வருகிறது. குறிப்பாக தர்காவின் ஐந்து மினாராக்கள், தலை மாட்டு வாசல் மற்றும் முக்கிய நுழைவுப் பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ட்ரோன் கேமரா மூலம் மேலிருந்து பார்க்கும்போது, மின்னொளியில் மிளிரும் தர்காவின் பிரம்மாண்ட தோற்றம் மேலும் அழகாக காட்சியளிக்கிறது. தர்காவின் கட்டட அமைப்புகள், மினாராக்கள் மற்றும் அலங்கார வாசல்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து, இரவு நேரத்தில் நாகூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கந்தூரி விழாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள், மின்னலங்காரத்தில் ஜொலிக்கும் தர்காவைக் கண்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். குடும்பத்துடன் வரும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் இந்த அழகிய ஒளியலங்காரக் காட்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
கடந்த 7-ம் தேதி பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், இன்று நாகப்பட்டினம் மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு நாகூர் தர்காவின் அலங்கார வாசலை வந்தடைகிறது. அங்கு ஐந்து மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, வரும் 19-ம் தேதி இரவு நாகப்பட்டினத்தில் இருந்து சந்தனக்கூடு புறப்பட்டு, 20-ம் தேதி அதிகாலை நாகூர் வந்தடைகிறது. அங்கு நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது. 23-ம் தேதி கொடி இறக்கத்துடன் 470-வது ஆண்டு கந்தூரி திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தர்கா தலைமை அறங்காவலர் ஹாஜா நஜ்முதீன் சாகிப் தலைமையில் போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர். 470-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு மின்னலங்காரத்தில் ஜொலிக்கும் நாகூர் தர்காவின் அழகிய தோற்றம், பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
