சென்னை தினம்: கனவு தொழிற்சாலையில்.. காணாமல் போனவை! கோயம்பேடு எனும் அற்புதம்!

  • சென்னை: சென்னை இன்று தனது 387வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில்.. நீங்களும் நானும் கூட சென்னையால் உருவாக்கப்பட்டவர்கள்தான். ஆனால் சென்னை எனும் மாபெரும் கனவு தொழிற்சாலையை அலங்கரித்த பல விஷயங்கள்.. இன்று முழுவதுமாக காணாமல் போயிருக்கிறது. அதில் கோயம்பேடு பேருந்து நிலையும் ஒன்று.

    Advertisement

    முன்னாடியெல்லாம்.. முன்னாடின்னா.. ரொம்ப முன்னாடி கிடையாது! இப்போதான் ஒரு ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி. தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்து வந்தாலும் கோயம்பேடுதான் சென்னையின் என்ட்ரி பாயிண்ட். அங்கிருந்து சிட்டிக்குள்ள 10 நிமிசத்துல போயிடலாம். அண்ணா நகர், பாடி, புரசை, கீழ்பாக்கம்.. பெரும்பாலும் காலையில டிராபிக் இருக்காது. கோயம்பேடு மப்சல் பஸ்ல இருந்து இறங்கி வந்தா.. டவுன் பஸ் புடிச்சி அரை மணி நேரத்துல சென்ட்ரல் வந்துடலாம்.

    Advertisement

    அப்புறம் என்ன அங்கிருந்து ஓட்டேரி, வண்ணாரப்பேட்டை, காசிமேடு இப்படி வட சென்னைக்கும்.. அயனாவரம், வில்லிவாக்கம், அண்ணா நகர் என மத்திய சென்னைக்கும் போயிடலாம். என்ன.. பண்டிகை நாட்கள் முடிந்து சென்னை திரும்பும்போதுதான் ரொம்ப கசகசனு தெரியும். ஆனா அதெல்லாம் பழக்கப்பட்டதுதான்.

    எல்லாத்துக்கும் இந்த கோயம்பேடுக்குதான் நன்றி சொல்லணும். நான் முதன் முதலில் சென்னை வந்தபோது கோயம்பேடு பிரமாண்டமா தெரிஞ்சுது. திருவொற்றியூர் போகனும்.. யார் கிட்ட பஸ்ஸ கேட்டாலும் சரியா சொல்ல. அவ்வளவு ஏங்க கண்டக்டர்கள் கிட்ட கேட்டா கூட.. டைமிங் ரூம்ல போய் கேளுனு போயிடுவாங்க. நான் வந்ததோ ராத்திரி 12 கிட்ட இருக்கும். டைமிங் ரூம்ல கேட்டா.. ஒரு மூலையை கை காட்டி அங்கதான் வரும்னு சொல்லிட்டாங்க.

    Advertisement

    அரை மணி நேரம் ஆச்சு பஸ் வரல.. வயிறு பசி! டீ சாப்பிட்ட கொஞ்சம் தெம்பு வரும். அதுக்குள்ள பஸ் வந்துட்டா? மணி இப்போ ராத்திரி 1. இதுக்கப்புறம் பஸ் வரும்னு தோணல. எங்கயும் எந்திரிச்சு போகவும் முடியாது.. ஊர் பேரு தெரியாத இடம். நியூஸ்ல எல்லாம் பாத்திருப்போமே சென்னை அப்படி, இப்படினு. அந்த பயம் வேற.. மணி ரெண்டை நெருங்குது.

    திடீர்னு தூறல் ஆரம்பிச்சுது.. கொஞ்ச நேரம்தான் இருக்கும் சட்டுனு மழை! மழைனா சாதாரண மழை இல்லை.. நின்னு பெய்யுற அடைமழை! காத்து சுத்தமா கிடையாது.. நைட்டு பெய்யுற மழை காலையில வரைக்கும் பெஞ்சிட்டே இருக்கும்னு சொல்லுவாங்க.. நான் உட்கார்ந்திருந்த இடம் நனைய ஆரம்பித்து.. பக்கத்திருந்தவருக்கும் அதே நிலைமைதான்.

    Advertisement

    "இங்கே இருந்தா மொத்தமா நெனஞ்சிடுவோம்.. சீக்கிரம் உள்ள ஓடிடுவோம்" சொல்லிட்டு.. எனக்காக வெயிட் பண்ணாம அவரு பாட்டுக்கு ஓடிட்டாரு. திரும்பி பார்த்தா ஆட்கள் யாருமே இல்லை.. எல்லா ஜனமும் கோயம்பேடுக்கு உள்ள ஓடுச்சு. நானும் எந்திருச்சி ஓடினேன்.

    கோயம்பேடுக்கு உள்ள அத்தனை மக்கள். பஸ்ஸுக்கு போறவங்க.. பஸ்ஸ விட்டு வந்து டவுன் பஸுக்காக வெயிட்ட பண்றவங்க, சொந்தக்காரங்களை தேடி வந்தவங்க, பாரிஸ்ல இருந்து பசங்களுக்கு பொருட்கள், துணி, மணி வாங்கிட்டு ஊருக்கு போக வெயிட் பண்றவங்க, குழந்தைகளை வெச்சு இருக்கும் தாய்மார்கள், முதியவர்கள்.. பக்கத்து மார்க்கெட்டில் கூலி வேலை செய்பவர்கள், காலை லோடு இறக்க வந்தவர்கள், ஆம்னி பஸ் கிளீனர்கள் இப்படி பாக்குற இடமெல்லாம் ஜனம்.

    Advertisement

    ஆனாலும் இன்னும் ஆயிரம் பேர் வந்தாலும் தங்கலாம்.. அவ்வளவு விசாலமா இருந்துச்சு. கொஞ்சம் பேரு துண்டு விரிச்சு படுத்துட்டாங்க.. கொஞ்சம் பேரு வெறும் தரையில உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க.. குழந்தைகளுக்கு சூடான பால் வாங்கவும், பிஸ்கெட் வாங்கவும் அப்பாகள் அலைஞ்சிட்டு இருந்தாங்க. ரெண்டு மூனு புகை வண்டிகளும்.. ஊதி தள்ளிட்டு இருந்துச்சுங்க.

    சென்னையில எந்த மூலையில இருந்தாலும் அதிகபட்சமா ஒரு மணி நேரத்துல கோயம்பேடு வந்துடலாம். கோயம்பேடுதான் எல்லாம்.. அவ்வளவு வசதி இருக்கு. பஸ் இல்லைன்னா.. ஒரு ராத்திரி படுத்து எந்திரிச்சு போகுற அளவுக்கான இடம். எழும்பூர் கேஎம்சி, சென்டர் ஜிஎச், ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் என அவசரத்துக்கு அரை மணி நேரத்திற்குள் போக ஆயிரத்தி எட்டு மருத்துவமனைகள் இருக்கு. ஊருக்கு போறவங்க பொருட்கள் வாங்க பக்கத்துல பாரிஸ் இருக்கு. வண்ணாரப்பேட்டையில் இருந்து புது துணி வாங்கி பஸ் ஏறினா அரை மணி நேரத்துல கோயம்பேடு. மக்களுக்கு இதுதான் சவுகரியம்.

    Advertisement

    இவ்வளவும் பக்கத்துலதான் இருந்துச்சு! இப்போ என்னமோ பஸ் ஸ்டாண்டு கிளாம்பாக்கம் மாத்திட்டாங்க. அங்கிருந்து நைட்டு 9 மணிக்கு மேல பிராட்வேக்கு பஸ் கிடைக்க மாட்டிங்குது.

    என்ன இருந்தாலும் கோயம்பேடு மாதிரி வராது.. நைட்டு எவ்வளவு நேரம் ஆனாலும் சைக்கிள் டீ வரும். என்னுடைய முதல் சென்னை வருகையின் போது குடித்த டீயின் கதகதப்பு இன்னமும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இன்னும் ஒருமுறை கூட கோயம்பேடு மீண்டும் பழையபடி இயங்கினால் நன்றாகத்தான் இருக்கும்.

    மக்கள் பைகளை சுமந்துக்கொண்டு.. கிளாம்பாக்கம் வரை அலைவதற்கு பதிலாக.. கோயம்பேடு மீண்டும் இயங்கினால்.. அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவையை உறுதி செய்தால்.. நிச்சயம் சென்னை மக்கள் நிம்மதியடைவார்கள். எல்லா ரூட்டுக்கும் பெரும்பாலான டைமுக்கு பஸ் இருந்தா சென்னையில் பெரிய அளவுக்கு டிராபிக் குறையும். அப்புறம் எதுக்கு கிளாம்பாக்கம்?

    English Summary

    Chennai Day: Chennai is celebrating its 387th birthday today. In one way or another, you and I have also been shaped by this city. Yet, many elements that once adorned Chennai—this vast "dream factory"—have completely vanished today. The Koyambedu bus terminus is one of them.