சென்னை: தி.நகர் பகுதியில் வெள்ளம் தேங்கி கிடப்பதை அமைச்சர் என்.ஆனந்த் இன்று ஆய்வு செய்து பணிகளைத் துரிதப்படுத்தினார். மேலும், புகார் அளித்த 10 நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு சென்று ஊழியர்கள் பிரச்சனையை சரி செய்து விடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் விடிய விடிய மழை கொட்டிய நிலையில் தியாகராய நகர் பகுதியில் மழை நீர் அகற்றும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் என். ஆனந்த், சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டார். தி.நகர் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளில் அவரே இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்று வெள்ளம் தேங்கி கிடப்பதை ஆய்வு செய்தார். அமைச்சர் ஆனந்த், மழை நீர் சூழ்ந்த உள்ளிட்ட இடங்களில் நீரை விரைவாக அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, தி.நகர் பேருந்து நிலையம் அருகே வீதியில் மரம் சாய்ந்து கிடந்த நிலையில், எந்திரம் மூலம் அதன் கிளைகளை அறுத்து மீட்புப் பணிக்கு ஆனந்த் உதவினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மழைநீர் அகற்றும் பணி குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "முதலமைச்சரின் உத்தரவின்படி சென்னையில் தேங்கும் வெள்ளத்தை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 30 மோட்டார்கள் வைத்திருக்கிறோம். முந்தைய ஆண்டுகளில் மழை நீர் 4 முதல் 5 நாட்கள் வரை சாலையில் தேங்கி நிற்கும். தி.நகர் பள்ளமான பகுதி என்பதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தற்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து நீர் அகற்றும் பணியை செய்து வருகிறோம். அனைத்து இடங்களிலும் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். புகார் அளித்த 10 நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையை சரி செய்து விடுவார்கள். மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 2,000 பேருக்கு இன்று, காலை உணவு ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளோம். மதியம் சாப்பாடு கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க அதிகாரிகள் நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார்கள். மூன்று மாதங்களாகவே முதல்வரின் உத்தரவின்படி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலங்களில் 4, 5 நாட்கள் வரை மழைநீர் தேங்கி நின்ற நிலையில், தற்போது 4, 5 மணி நேரங்களிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை முதலமைச்சர் விஜய் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். மேலும், பொறுப்பு அமைச்சர்கள் பணிகளை விரைந்து முடிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.