விமான நிலையத்தை “தனியார் எடுத்துக்கொள்ளுங்கள் என முதல்வரே கேட்பதா? விளாசிய மார்க்சிஸ்ட் கட்சி!

  • சென்னை: இந்திய வரலாற்றிலேயே அரசு பொதுத்துறை நிறுவனமான சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல் முதலமைச்சர் விஜய்தான் என்று தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஐஎம் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த மாதம் கடிதம் அனுப்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

    Advertisement

    பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் எழுதிய இந்த கடிதம் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஆங்கில நாளேட்டில் இது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தவெக அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக சிபிஐஎம் மூத்த தலைவர் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், "சென்னை விமான நிலையத்தின் சேவையில் குறைபாடு இருக்கிறது என்பதற்காக அதைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எப்படி சரியான தீர்வாக இருக்க முடியும்? நாளை அரசாங்கத்தால் ஒரு பணியைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றால், அரசாங்கத்தையே தனியார் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வீர்களா?

    Advertisement

    தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு பொதுத்துறை நிறுவனத்தை, "தனியார் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று ஒரு மாநில அரசே கேட்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது.

    நெய்வேலி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இப்போது ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்பது எப்படி சரியாகும்? பொதுத்துறை நிறுவனங்களும் மக்களின் சொத்துதானே?

    தனியார் நிறுவனங்களில் குறைபாடுகளே இல்லையா? தனியார் நிர்வாகத்தில் எல்லாம் சிறப்பாகவே நடைபெறுகிறது என்று சொல்ல முடியுமா? ஒருபுறம் மத்திய பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு கேட்கிறது. இன்னொருபுறம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையத்தைத் தனியாரிடம் மாற்ற வேண்டும் என்று கேட்கிறது.

    Advertisement

    விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அதன் சேவையை எப்படி மேம்படுத்துவது என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைப்பது தீர்வாக இருக்க முடியாது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவும் முதல்முறை. ஏன் இவ்வாறு தொடர்ந்து நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

    சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்க வேண்டும் என்ற முடிவு எப்படி எடுக்கப்பட்டது? இது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவா? புதிய அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு வேகமாக இப்படிப்பட்ட முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    CPIM, a party supporting the TVK, has sharply criticized Vijay, noting that he is the first Chief Minister in Indian history to write to PM Modi urging the privatization of the Chennai Airport—a government-owned public sector undertaking.