எங்கள் காதுகள் பாவமில்லையா? மறுபடியும் உடையுது அதிமுக?மீண்டும் கைகோர்த்த சிவிஎஸ் - எஸ்பிவி! ட்விஸ்ட்

  • சென்னை: அதிமுகவில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல், அக்கட்சி வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது எடப்பாடி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    சென்னையின் எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

    Advertisement

    விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சமீபத்தில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    அதிமுக

    விஜயபாஸ்கரின் இந்த முடிவு, அதிமுகவில் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் சில தலைவர்களுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அணியில் இருந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, சி.வி.சண்முகம் தற்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து உடனடியாக இடைத்தேர்தலை சந்திக்கும் மனநிலையில் இல்லை என கூறப்படுகிறது.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் தனது நிலையை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், "கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் கட்சித் தாவல் சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என சிலர் இருக்கலாம். ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சி.வி.சண்முகம்

    இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி வேறுவிதமான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. சி.வி.சண்முகம் தன்னை சந்திக்காமல் இருப்பதால் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், சி.வி.சண்முகம் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் அதிருப்தி அணியினருக்கு பிற வாய்ப்பு கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியாக இதை பார்க்கின்றனர்.

    Advertisement

    எஸ்.பி.வேலுமணி

    இந்த சூழலில்தான் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் மீண்டும் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஒரே அணியில் செயல்பட்ட இருவரும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களின் அடுத்தகட்ட முடிவு, இடைத்தேர்தல், தவெகவுக்குச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் ஊகிக்கின்றன.

    மீண்டும் உடையும் அதிமுக?

    ஏற்கனவே பல தொகுதிகள் காலியாகியுள்ள நிலையில், மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனால் தமிழகம் விரைவில் பல தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்ற பேச்சும் அரசியல் களத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முக தரப்பு சந்திப்பு அதிமுகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக மீண்டும் உடையும் சூழலும் உருவாகியுள்ளது.

    English Summary

    Renewed talks between CV Shanmugam and SP Velumani fuel speculation of unrest and possible realignments within AIADMK.