தர்மபுரி: மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவுச் சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்குக் கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்குப் போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்துக் கேட்டபோது, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். இதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காகத் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தைப் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் எனத் தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்துத் தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன எனக் கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்குத் தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கித் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளைத் தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி கூறினார்.