விஜய் ஆட்சிக்கு சிக்கல்.. வேகமெடுக்கும் விசாரணை! அதிமுக மாஜிகளிடம் விசாரணை நடத்தும் சபாநாயகர்! பரபர
சென்னை: அதிமுகவில் இருந்து தவெகவிற்கு தாவிய 4 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று மீண்டும் விசாரணை நடத்தவுள்ளார். மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இன்று முதல் 3 நாட்கள் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து வழக்கறிஞர் ஒருவரும் இந்த விசாரணையில் பங்கேற்கவுள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. தற்போது வரை அதே பரபரப்பு சற்றும் குறையவில்லை என்பதுதான் உண்மை. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது.

ஆனால் ஆட்சி அமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
தவெக அரசு
சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மின் வெட்டு, விலைவாசி உயர்வு என அடுத்தடுத்து பல அஸ்திரங்களை தவெகவை நோக்கி திமுக வீசி வருகிறது. சரியான எதிர்கட்சியாக திமுக சலைக்காமல் பணியாற்றி வரும் நிலையில் எதிர் முகாமான அதிமுகவில் நிலைமை சற்று மோசமாகவே இருக்கிறது. குறிப்பாக தேர்தல் நிறைவடைந்ததும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுகவில் மோதல் வெடித்தது. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கினார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அதிமுகவின் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 24 பேர் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகர் இடம் மனு அளித்தார்.
தகுதி நீக்க வழக்கு
இதில் 21 எம்எல்ஏக்களை மன்னித்து நடவடிக்கையை கைவிடுவதாக எடப்பாடி பழனிச்சாமி கடிதம் கொடுத்தார். அதற்குப் பிறகு எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் பதிவுகளை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த நிலையில் இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகிய நான்கு பேர் மீது தகுதி நீக்க வழக்கு விசாரணையில் இருக்கிறது.
ஜேசிடி பிரபாகர்
அதற்கு முன்னதாக எம் ஆர் விஜயபாஸ்கர் சி விஜயபாஸ்கர் தவித்து நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார்.
விசாரணை தீவிரம்
சபாநாயகரின் முடிவு சரியானது தான் என தீர்ப்பளித்த நீதிமன்றம் தகுதி நீக்க வழக்கில் இரண்டு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனால் நான்கு எம்எல்ஏக்கள் மீதான விசாரணை தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் 12 ஆம் தேதி வரை இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரிடம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விசாரணை நடத்த உள்ளார்.
தனிப்பட்ட அதிகாரம்
இந்த விசாரணையின் போது அதிமுக தரப்பில் இருந்து வழக்கறிஞர் ஒருவரும் பங்கேற்க இருக்கிறார். விசாரணை முடிவடைந்த பிறகு வரும் 17ஆம் தேதி சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகருக்கு என தனிப்பட்ட அதிகாரங்கள் இருக்கும் நிலையில் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று சொல்கின்றனர்.
பறிபோகும் பதவி?
பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே இந்த விசாரணை இருக்கும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர். அதே நேரத்தில் ஒருவேளை தகுதி நீக்க நடவடிக்கை எடுத்தால் வரும் தேர்தலில் மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் போட்டியிட முடியாது. மேலும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமாவின் பதவியும் பறிபோகும் அபாயம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
