சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிராக திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த்திருந்தார். பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது. பட்டின்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அங்கு பல தலைமுறைகளாக வசித்து வரும் மீனவ மக்களின் பூா்விக குடியிருப்பு உரிமை மற்றும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என கூறப்பட்டது. இதனால், கடலில் மீன்பிடிப்பது, படகுகளை நிறுத்துவது, வலை பின்னுதல், மீன்களை உலா்த்துதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏற்கனவே, அப்பகுதியில் சாந்தோம் தேவாலயம், பள்ளிகள், அரசு அலுவலகம் உள்ளிட்டவை இருப்பதால் இப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் கூறி பலரும் எதிப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ மயிலை வேலு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பட்டினப்பாக்கத்தைத் தேர்வு செய்ததற்கான காரணம் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை என்றும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்படும் மீனவர்கள்
போக்குவரத்து நெரிசல்
திமுக வழக்கு