ஒரு மனுஷன் எத்தனைய தான் தாங்குறது.. விஜய்க்கு முளைத்த புது சிக்கல்! ஆளுநர் மாளிகைக்கு பறந்த புகார்!
சென்னை: தமிழக வெற்றி கழகம் தலைமையிலான புதிய அரசுக்கு அடுத்தடுத்து சட்ட மற்றும் அரசியல் சிக்கல்கள் உருவாகி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், மறுபக்கம் தவெக எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குகள் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருப்பத்தூர் எம்எல்ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், தற்போது சேலம் மேற்கு தொகுதி தவெக எம்எல்ஏ லட்சுமணனுக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, முழுமையான பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.

இதற்கிடையே திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், தற்போது தவெகவின் பலம் 107 ஆக உள்ளது. இந்த சூழலில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சீனிவாச சேதுபதி
ஆனால் அதற்கு முன்பாகவே தவெக எம்.எல்.ஏக்கள் தொடர்பாக இரண்டு பெரிய சர்ச்சைகள் வெடித்துள்ளன. அதில் முதன்மையானது திருப்பத்தூர் தொகுதி விவகாரம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச, திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கேஆர் பெரியகருப்பனை வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தபால் வாக்கு
தனது தொகுதிக்கான ஒரு தபால் வாக்கு தவறுதலாக வேறு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு பதிலாக, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும், அதனால் தேர்தல் முடிவு மாறியிருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால உத்தரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்க தடை விதித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு வாக்கு கூட அரசின் நிலையை தீர்மானிக்கும் சூழலில் நீதிமன்றம் கவனமாக அணுக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தவெக எம்.எல்.ஏ லட்சுமணன்
இதற்கிடையே, சேலம் மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ லட்சுமணனுக்கு எதிராகவும் புதிய புகார் எழுந்துள்ளது. அவர் தனது வேட்புமனுவில் முக்கிய தகவல்களை மறைத்துள்ளதாக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளரான மனோகர் அளித்துள்ள புகாரில், காவல் ஆய்வாளராக பணியாற்றிய காலத்தில் லஞ்ச வழக்கில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்ட விவரத்தை லட்சுமணன் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம்
இதனால் அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த இரண்டு விவகாரங்களும் தற்போது தவெக அரசுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே இந்த பிரச்சினைகள் எழுந்திருப்பது அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது. ஒருபுறம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அழுத்தம், மறுபுறம் நீதிமன்ற வழக்குகள் மற்றும் தகுதி நீக்க கோரிக்கைகள் என தவெக அரசு முதல் வாரத்திலேயே கடுமையான அரசியல் சோதனைகளை சந்தித்து வருகிறது.












Click it and Unblock the Notifications