தவெக அரசின் இந்தி பாசம்! ஆட்சிக்கு வந்ததும் ஆட்டம் காணும் இருமொழிக் கொள்கை! கொதிக்கும் மக்கள்!

  • சென்னை: 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தத்துவத்தையும், அண்ணா - பெரியார் வழியிலான சமத்துவ அரசியலையும், தமிழ் மண்ணின் இருமொழிக் கொள்கையையும் தேர்தல் களத்தில் தாராளமாக முழங்கி ஆட்சிக் கட்டிலில் ஏறிய தமிழக வெற்றிக் கழக அரசு, இப்போது தன் கொள்கைப் பயணத்தில் திசைமாறி நிற்கிறதா என்ற கேள்விகள் தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன.

    Advertisement

    குறிப்பாக, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில், பக்தர்களுக்கான அறிவிப்புப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் தாராளமாக இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையையும் விமர்சன அலைகளையும் கிளப்பியுள்ளது.

    Advertisement

    கோயில்களில் இந்தி நுழைவு: நடந்தது என்ன?

    உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மாநிலத்தின் முக்கியத் திருக்கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்காக கோயில்களின் நுழைவு வாயில்களில் பக்தர்கள் செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அங்கு வைக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் கட்டண அறிவிப்புப் பலகைகளில்தான் தமிழ், ஆங்கிலத்தைத் தாண்டி மூன்றாவதாக இந்தி மொழியும் பெரிய அளவில் அச்சிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரம், மதுரை, ஸ்ரீரங்கம், பழனி போன்ற பெருங்கோயில்களில் மட்டுமின்றி, பல மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கோயில்களிலும்கூட இந்த நடைமுறை மெல்லப் பரவத் தொடங்கியிருப்பதுதான் சமூக ஆர்வலர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    Advertisement

    இருமொழிக் கொள்கைக்கு விழுந்த அடியா?

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற 'இருமொழிக் கொள்கை'தான் மாநிலத்தின் உறுதியான அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களிலோ அல்லது ரயில்வே, தபால் துறை, வங்கி போன்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலோ இந்தி முன்னிலைப்படுத்தப்படும்போதெல்லாம், கொந்தளித்து வீதிக்கு வந்து போராடுவதுதான் இந்த மண்ணின் வரலாறு.

    அப்படிப்பட்ட தமிழ்நாட்டில், மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள அறநிலையத்துறையே வலியச் சென்று கோயில்களில் இந்திக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. "தேர்தல் பரப்புரைகளில் மாநில சுயாட்சி குறித்தும், தமிழ் மொழியின் தனித்துவம் குறித்தும் உணர்ச்சிபொங்கப் பேசிவிட்டு, ஆளுங்கட்சியான பிறகு நிர்வாகத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது எந்த மாதிரியான சமூக நீதி அரசியல்?" என எதிர்க்கட்சிகளும் தமிழ் தேசிய அமைப்புகளும் சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

    Advertisement

    நிர்வாகக் குளறுபடிகளும் போலி வாதங்களும்

    "வட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்; அவர்களின் வசதிக்காகவே இந்தி சேர்க்கப்பட்டது" என்று துறை அதிகாரிகள் தரப்பில் ஒரு பலவீனமான விளக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்த வாதத்தை விமர்சகர்கள் அடியோடு நிராகரிக்கின்றனர்.

    கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் தமிழ் உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழி அறிவிப்புகள் எந்த அளவுக்கு இடம்பெறுகின்றன என்ற எளிய கேள்வியே இங்கு எழுகிறது. மேலும், உலகளாவிய தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்போது, தனியாக இந்தியை முன்னிறுத்துவது மறைமுகமாக மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைத் தவெக அரசு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுவிட்டதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இதற்கு தமிழக வெற்றிக்கழகம் என்பதற்கு பதிலாக இந்தி வெற்றிக்கழகம் என்று வைத்து இருக்கலாமே உங்கள் கட்சி பெயரை என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

    Advertisement

    கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று செல்போன்களை ஒப்படைக்க அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் அலைக்கழிக்கப்படும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாத துறை நிர்வாகம், பலகைகளில் இந்தி அச்சிடுவதில் காட்டும் வேகம் வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மௌனம் கலைக்குமா தலைமை?

    கொள்கை ரீதியாகக் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், இந்தி திணிப்புப் பூதம் இப்போது தவெக அரசின் சொந்தத் துறையிலிருந்தே முளைத்து வந்திருக்கிறது. அதிகாரிகளின் போக்கிற்கு நிர்வாகத்தை விட்டுவிட்டு தவெக தலைமை அமைதி காக்குமானால், அது கட்சியின் அடித்தளமாக விளங்கும் தமிழ் அடையாள அரசியலையே பலவீனப்படுத்திவிடும்.

    Advertisement

    அறிவிப்புப் பலகைகளில் உள்ள இந்தி வாசகங்களை உடனடியாக அகற்றி, மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இருமொழிக் கொள்கையை அரசு நிலைநிறுத்தப் போகிறதா அல்லது நடைமுறை எதார்த்தம் என்ற பெயரில் கொள்கைச் சமரசங்களை அதிகாரப்பூர்வமாக்கப் போகிறதா என்பதை ஆட்சியின் தலைமை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

    English Summary

    Hindi on Tamil Nadu Temple Signboards: TVK Govt Faces Severe Backlash Over Language Policy Shift