கேடுகெட்ட ஆட்சி.. இந்த புகைப்படமே சாட்சி! பெண்ணை மிதித்து கைது.. தவெக அரசை விளாசிய கனிமொழி

  • சென்னை: மதுரை அருகே பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டும், அவரது மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென இழுத்துச் சென்று காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கி விட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    தமிழ்ச்செல்வன் மரணம்

    "கொலையா? ஆணவப் படுகொலையா?" என்ற கேள்வியை எழுப்பி 7 நாட்களாக பிணவறையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரின் மெத்தனப் போக்கை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து விரட்டியதால், அவர்கள் காவல் ஆணையர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    காவல்துறை அடக்குமுறை

    போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட பலரை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்தப் போராட்டம் காரணமாக மதுரை அழகர் கோவில் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை.‌ இந்நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், கொலை வழக்காக பதிவு செய்யப்பட வேண்டும், உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கைகளை போராட்டத்தை ஈடுபட்டு வருபவர்கள் முன் வைத்தனர்.

    வலுக்கட்டாயமாக கைது

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் கால்களால் மிதித்து பிடித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கண்டனம் குவிந்து வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக துணை பொது செயலாளரும் எம்பியுமான கனிமொழி.

    Advertisement

    கனிமொழி

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு. உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது." என விமர்சித்துள்ளார்.

    English Summary

    Kanimozhi condemns TVK government after police arrest protesters seeking justice for Madurai student Tamilselvan’s death.