சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு கடந்த வாரம் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஎஸ் பாபு உடல் நிலை தற்போது எப்படி உள்ளது? என்பது குறித்த விவரத்தை மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் பகிர்ந்துள்ளார்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஎஸ் பாபு (வயது 75). கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்ஜிஎம் மருத்துவமனையில் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 10ஆம் தேதி விஎஸ் பாபு உடல்நிலை சீராக உள்ளதாக எம் ஜி எம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து இருந்தது. மேலும், விஎஸ் பாபுவுக்கு தேவையான மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. எனினும் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தான் அமைச்சர் அருண்ராஜ் விஎஸ் பாவுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் மருத்துவர்களிடம் என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்ற விவரங்களையும் கேட்டறிந்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், "நுரையீரல் தொற்று காரணமாக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன் உள்ளார்.. கூடிய விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். விஎஸ் பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" என்று பதில் அளித்தார். அப்போது, வி.எஸ். பாபுவுக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்காமல் அருண்ராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார்.