வீரமணி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் ஆப்பிரிக்காவில் இருந்தா அதிகாரிகள் வருவார்கள்?”- ஐகோர்ட்

  • சென்னை: ஜெம் வீரமணி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து 4 நாட்கள் தான் ஆகிறது, உடனே ஏன் சிபிஐக்கு மாற்ற வேண்டும்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    வழக்கில் அனைத்து ஆதாரங்களையும் திரட்ட எஸ்ஐடிக்கு அவகாசம் தர வேண்டும் என நீதிபதி லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை அறிக்கையை அக்டோபர் 7 ஆம் தேதி தாக்கல் செய்ய எஸ்.ஐ.டிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    சிறுமிகளை பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக, கிரானைட் நிறுவன உரிமையாளர் ஜெம் வீரமணி கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். வீரமணி மீதான வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகரன், வாராகி ஆகியோர், தாக்கல் செய்த பொது நல மனுவில், வீரமணியுடன், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், உடனிருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அரசியலாக்கப்படும் வழக்கின் தீவிரத்தை கருதி, விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.

    இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "சிறப்புக்குழு அமைத்து சில நாட்களே ஆன நிலையில் ஏன் சிபிஐக்கு மாற்ற வேண்டும், சிபிஐக்கு மட்டும் ஆப்ரிக்காவில் இருந்தா அதிகாரிகள் வருவார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

    மேலும், மனுதாரர்களிடம் ஆதாரம் இருந்தால் நாளை 3 மணிக்கு சிறப்புக்குழு அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். வீரமணி மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தவிட்டது. இந்த வழக்கில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய எஸ்.ஐ.டிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    English Summary

    Madras High Court has refused to transfer the sexual assault case involving Gem Veeramani to the CBI. The judge questioned why the case should be transferred to the CBI immediately, noting that it has been only four days since the Special Investigation Team was constituted.