பூமிக்கு 2வது நிலா.. இதென்னங்க புது வில்லங்கம்? நாசா சொன்ன ஆச்சரியமான தகவல்!
வாஷிங்டன்: பூமிக்கு இரண்டாவதாக நிலவு கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். என்ன நமக்கு இது ஆச்சரியத்தை கொடுத்தாலும், பூமி மீது இது மோதிவிடுமோ? என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.
பூமியின் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசை காரணமாக, 2026 QQ8, என்ற சிறிய விண்கல் தற்காலிகமாக ஈர்க்கப்பட்டு நம்முடைய குட்டி நிலவாக மாறி இருக்கிறது. இந்த இயற்கை விண்கல்லால் நமக்கு எந்த வித ஆபத்தும் இல்லை. அடுத்த மாதம் இந்த விண்கல் பூமியில் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு சென்று விடும்.

இந்த விண்கல்லை கிரிஸ்டியன் சர்னெக்ஸ்கி என்ற வானியலாளர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி கண்டுபிடித்தார். இதன் சுற்றுப் பாதையை ஆய்வு செய்தபோது.. கடந்த ஏப்ரல் மாதமே இது, பூமியின் ஈர்ப்பு விசை பகுதிக்குள் நுழைந்து விட்டது தெரியவந்துள்ளது. இந்த விண்கல் அளவில் மிகச்சிறியது. குறுக்களவில் சுமார் 1 மீட்டர் மட்டுமே விட்டம்கொண்டதாகும்.
இது பூமிக்கு மிக அருகில் வரும் போது கூட.. நமக்கும் உண்மையான நிலவுக்கும் இடைப்பட்ட சராசரி தூரத்தை போலவே 1.5 மடங்கு தூரத்தில் தான் இருக்கும் என்பதால் நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
ஆரம்பத்தில், இது மனிதனால் உருவாக்கப்பட்ட பழைய ராக்கெட் அல்லது செயற்கைக்கோளின் உடைந்த பாகமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகப்பட்டனர். ஆனால், ஹவாய் பல்கலைக்கழகத்தின் 2.2 மீட்டர் தொலைநோக்கி மற்றும் லோவெல் டிஸ்கவரி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்தபோது.. இது மனிதன் உருவாக்கிய குப்பை அல்ல, இயற்கை கொடுத்த அதிசயம் என்பது தெரியவந்தது.
பூமியை சுற்றி 'ஹில்ஸ் ஸ்பியர்' என்ற பகுதி உள்ளது. இந்த எல்லைக்குள் சூரியனின் ஈர்ப்பு விசையை விட, பூமியின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். இந்த எல்லையை தாண்டி தான்.. கடந்த ஏப்ரல் மாதம் 2026 QQ8 விண்கல் உள்ளே வந்திருக்கிறது. இதனுடைய சுற்றுப்பாதை நேர்கோடாக இல்லாமல்.. ஒரு மாதிரி வளைந்து நெளிந்ததை போல் இருக்கிறது.
ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை, இந்த விண்கல் நமக்கு அருகில் வந்து செல்கிறது. இப்படி இருக்கையில்.. வரும் டிசம்பர் மாதம், இது நம்மை விட்டு விலகிச் சென்று விடும். கடந்த 1965 ஆம் ஆண்டிலும் இது பூமிக்கு அருகில் வந்தது. ஆனால், அப்போது குட்டி நிலவாக மாறும் அளவுக்கு நெருங்கி வரவில்லை. இதற்கு அடுத்து.. 2058 ஆம் ஆண்டில் மீண்டும் பூமிக்கு அருகில் வரும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்பும் பூமிக்கு 2020 SO, 2020 CD3 மற்றும் 2024 PT5 தற்காலிக நிலவுகள் கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
