மொபைல் போன் பாதுகாக்க ரூ.5 கட்டணம் ஏன்? கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது.. வெடித்த அமைச்சர் ரமேஷ்!

  • சென்னை: கோயில்களில் மொபைல் போன் பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும்தான் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மொபைல் போனுக்கு தடை விதிக்கப்படுவது புதிய நடைமுறை அல்ல என்று கூறிய அமைச்சர் ரமேஷ், தமிழக அரசின் திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் 52 பெரிய கோயில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் ரீல்ஸ் வெறியை கோயில்களில் அரங்கேற்ற கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் அறநிலையத்துறையின் இந்த செயல்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    Advertisement

    ஏனென்றால் மொபைல் போனை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பார்க்கிங் கட்டணம், செருப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தும் பக்தர்கள், தற்போது மொபைல் பாதுகாப்பு கட்டணமும் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சித்ரவதையை அனுபவிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வட மாநிலங்களில் பாஜக ஆளக் கூடிய மாநிலங்ஜளில் உள்ள கோயில்களிலும் மொபைல் போனுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா என்று அத்தனை மாநிலங்களிலும் இருக்கிறது. தவெக ஆட்சியில் ஏதோ புதிதாக கொண்டு வந்த திட்டம் போல் பேசுகிறார்கள்.

    Advertisement

    கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தடுப்பதாக சிலர் பேசுகின்றனர். அப்போது பாஜக ஆளும் மாநிலங்களில் நீங்கள் அப்படிதான் செய்கிறீர்களா? இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். திருவிழா நாட்களில் மொபைல் போன் வாங்க வேண்டாம் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சங்கடம் ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

    நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் மொபைல் போன் தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இது புதிய நடைமுறை அல்ல.. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் பக்தர்களிடம் மொபைல் போன் வாங்க தேவையில்லை. கேமரா போன் தவிர்த்து வேறு மொபைல்களை வாங்கி வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். ரூ.5 கட்டணம் வாங்குவது ஊழியர்கள் சம்பளத்திற்காக தான்.

    Advertisement

    அப்படி ரூ.5 கட்டணம் அதிகமாக இருந்தால், பக்தர்கள் அன்னதானம் சாப்பிட பயன்படுத்தப்படும். இதனை தனி நபர்கள் எடுத்து செல்வதை போல் பேசி வருகிறார்கள். கண்மூடித்தனமாக எதையும் எதிர்க்க கூடாது. மக்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Mobile Ban: Rs.5 Fees for Temple Mobile Phone Storage Is Only for Staff Salaries Says Minister Ramesh