தாய்ப் பத்திரம் அவசியம்.. பூர்வீக சொத்தை தேடி கண்டுபிடிப்பது எப்படி? பழைய பத்திரம் மீட்க ஈஸி வழி

  • சென்னை: தாத்தா பாட்டி காலத்தில் வாங்கிய சொத்து எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.. ஆனால், பத்திரம் மட்டும் வீட்டில் பத்திரமாக இருக்கிறது! பல ஆண்டுகளாக அந்த நிலத்தை யாரும் சென்று பார்க்கவே இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை யாருக்காவது வந்தால் என்ன செய்வது? கையில் ஒரு பழைய பத்திரம் மட்டும் இருந்துவிட்டால் போதுமா? பல வருடங்களுக்கு முன்பே முடங்கிக்கிடக்கும் பரம்பரை சொத்துக்களை சட்டப்பூர்வமாக மீட்டெடுப்பது எப்படி? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

    Advertisement

    நம்முடைய சொந்த ஊரில் சொத்து இருந்தால், எப்போது வேண்டுமானாலும் நாம் நேரில் சென்று உரிமை கொண்டாடலாம். ஆனால், வெளியூர்களில் வாங்கி போடப்பட்ட பூர்வீகச் சொத்துக்கள் என்றால் அங்கே நிலைமையே வேறு.

    Advertisement

    பெரியவர்கள் காலத்தில் வாங்கப்பட்ட அந்த சொத்துக்களின் பழைய பத்திரங்கள் மட்டுமே இன்றைக்கு நம் கையில் மிஞ்சியிருக்கும்.. உயில் அல்லது செட்டில்மெண்ட் போன்ற மாற்றங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்காமல், வெறும் கிரயப் பத்திரம் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அந்த சொத்துக்களை சொந்தமாக்குவது முள்வேலி பாதையில் நடப்பதை போன்றது.

    பரம்பரை சொத்துக்கள்

    பல குடும்பங்களில் தாத்தா அல்லது பெற்றோர்கள் வாரிசுகளுடன் நல்ல உறவில் இருந்திருக்கலாம் அல்லது சொத்து கைமாறுவதை தடுக்க முயன்றிருக்கலாம். இதுபோன்ற சூழலில், சொத்து யாருடைய பெயரில் உள்ளது, வாரிசுகளுக்கு என்ன உரிமை உள்ளது என்பதை கண்டறிய பழைய ஆவணங்களையும் சட்டப்பூர்வ பதிவுகளையும் முழுமையாகச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

    Advertisement

    பூர்வீக சொத்தைத் தேடும்போது முதலில் அந்த பழைய பத்திரத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கிராமம், தாலுகா, மாவட்டம், சர்வே எண், உட்பிரிவு எண், பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் நிலத்தின் 4 பக்க எல்லைகள் போன்ற தகவல்கள் எல்லாம் மிகவும் முக்கியமான துருப்புசீட்டுகள்.

    சில பழைய பத்திரங்களில் அப்போது பயன்படுத்தப்பட்ட பழைய சர்வே எண்கள் மட்டுமே இருக்கக்கூடும். காலப்போக்கில் அவை புதிய சர்வே எண்களாகவோ, உட்பிரிவு எண்களாகவோ மாறியிருக்கலாம். அதனால் பழைய சர்வே நம்பரையும், இப்போதுள்ள வருவாய் பதிவிலுள்ள நம்பரையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

    Advertisement

    பூர்வீக சொத்துக்களை எப்படி மீட்பது

    ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது தெரியுமா? பல வருஷமாக யாரும் கண்காணிக்காமல், கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் அந்த நிலங்களில் அக்கம் பக்கத்து ஆக்கிரமிப்பாளர்கள் அத்துமீறி நுழைந்து ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள்..

    உங்கள் பத்திரத்திலுள்ள அளவோடு அண்டை நிலத்தையும் சேர்த்து தவறான அல்லது மோசடியான ஆவணங்கள் உருவாக்கப்படலாம். ஏன், அது அடுத்தவரின் மனை என்று தெரியாமலேயே அங்கே கட்டிடங்கள் கூட எழுப்பப்பட்டிருப்பது பின்னாளில் தான் வெளிச்சத்திற்கே வரும். இப்படியான சூழலில், நில அபகரிப்பாளர்களிடமிருந்து பூர்வீக சொத்துக்களை காப்பாற்றுவது வாரிசுகளுக்கு மிகப்பெரிய சோதனையாக மாறுகிறது.

    EC எனப்படும் வில்லங்கச் சான்றிதழ்

    இந்த சிக்கல்களிலிருந்து தப்பிக்க வேண்டுமானால்,அந்த சொத்து இருக்கும் பகுதியில் உள்ள வருவாய்த்துறை பதிவுகளை சரி பார்க்க வேண்டும். பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பதிவுகளில் அந்த நிலத்தின் இப்போதள்ள விவரங்களையும் பார்க்க வேண்டும்.. பழைய உரிமையாளர் பெயரில் இருந்த சொத்து, இப்போதைக்கு யார் பெயரில் இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

    Advertisement

    அதேபோல, பத்திரப்பதிவு அலுவலகத்தில் EC எனப்படும் வில்லங்கச் சான்றிதழ் எடுத்து பார்க்க வேண்டும்.. குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்தச் சொத்து விற்கப்பட்டதா, அடமானம் வைக்கப்பட்டதா, வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டதா போன்ற அனைத்து பரிமாற்றங்களையும் EC மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    அதுக்காக EC மட்டுமே போதாது.. பழைய தாய்ப்பத்திரம், இப்போதுள்ள பத்திரங்கள், பட்டா மற்றும் பிற வருவாய் ஆவணங்களை ஒன்றுடன் ஒன்று உன்னிப்பாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

    தாய்ப்பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம்

    குடும்பத்தில் அந்த சொத்து தலைமுறை தலைமுறையாக வந்திருந்தால், ஒவ்வொரு தலைமுறையிலும் ஏற்பட்ட வாரிசு மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். மரண சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பாகப்பிரிவினைப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம் போன்ற ஆவணங்களும் தேவைப்படலாம். நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, கிடைக்கும் பதிவுகளின் அடிப்படையில் ஆன்லைனில் தேடலாம்.. பழைய பதிவுகளுக்கு சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை அணுக வேண்டியிருக்கலாம்.

    Advertisement

    தொலைதூர சொத்துக்களை மீட்கும்போது வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம் அலைச்சலும் தாமதமும் ஏற்படலாம். அதுக்காக, சொத்து இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தவுடன் சென்று அங்கே சண்டை போடுவதா, பிரச்சனையை உண்டாக்குவதோ எந்த வகையிலும் தீர்வாகாது. அமைதியான முறையில், சொத்து வழக்குகளில் அனுபவமுள்ள வழக்கறிஞரின் உதவியோடு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனம்.

    பழைய காகிதம்? விலைமதிப்பற்ற சொத்து?

    கலெக்டர் ஆபீஸில் ஆவணக் காப்பகங்கள் மற்றும் நீதிமன்ற பதிவுகள் மூலம் பல தலைமுறை சொத்துக்களுக்கு தீர்வு காண முடியும். எனவே, குடும்பத்தில் உள்ள வயதான மூத்த உறவினர்களிடம் பேசி நிலம் கைமாறிய வரலாற்றைக் கேட்டறிவதுடன், அந்த ஊரில் நீண்டகாலமாக வசிப்பவர்களிடம் விசாரித்தாலே பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும்.

    மொத்தத்தில், பூர்வீக சொத்து எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றாலும் நம்பிக்கையை விட்டுவிட வேண்டியதில்லை. கையிலுள்ள பழைய பத்திரத்தில் தொடங்கி, சர்வே எண், எல்லைகள், EC, பட்டா, வருவாய் பதிவுகள், தாய்ப்பத்திரங்கள் என ஒவ்வொன்றாக சரிபார்த்தால் அந்தச் சொத்தின் தற்போதைய நிலையைத் துல்லியமாக கண்டறிய முடியும். பழைய பத்திரம் வெறும் காகிதம் மட்டுமல்ல.. பல தலைமுறைகளாக மறைந்திருக்கும் சொத்தின் விலைமதிப்பற்ற தடயமாகவும் இருக்கக்கூடும்...!

    English Summary

    Parent Deed Is Crucial.. How to Find Your Ancestral Property? Here’s How to Recover Old Property Records