தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம் - ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் திடீர் அறிவிப்பு பலகை!

  • விழுப்புரம்: "தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம்" என பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், தன்னை சந்திக்க வருபவர்கள் அரசியல் பேச வேண்டாம் என ராமதாஸ் தைலாபுரம் வீட்டின் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    1980-ல் வன்னியர் சங்கம், 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியை தோற்றுவித்தவர் மருத்துவர் ராமதாஸ். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் கிராமத்தில் இருந்து தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் கோலோச்சினார். தைலாபுரம் மிக முக்கிய அதிகார மையமாக விளங்கியது. அரசியல் அரங்கை அசைக்கும் பல முடிவுகளை இங்கிருந்துதான் எடுத்துள்ளார் ராமதாஸ்.

    Advertisement

    பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ராமதாஸ், சரஸ்வதி திருமண நாளில் முடிவுக்கு வந்தது. அன்று குடும்பத்துடன் தைலாபுரம் சென்ற அன்புமணி, ராமதாஸிடம் ஆசி பெற்றார். அப்போது, அன்புமணியை கட்டிப்பிடித்து அழுதார் ராமதாஸ். அதையடுத்து இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டது.

    ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ராமதாஸ், "உங்களுக்கு நல்ல செய்தியைச் சொல்கிறேன். இன்று முதல் அரசியல் துறவறம் பூணுகிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், நான் அரசியலை பேசமாட்டேன். அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். நாங்களும் அதற்குத் துணையாக இருப்போம்." என்றார்.

    Advertisement

    இதையடுத்து தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரையும் ராமதாஸ் சந்தித்து உரையாடி வருகிறார். அவரை சந்திக்கும் தொண்டர்கள், தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களை வழங்குகின்றனர். ராமதாஸிடம் சிலர் அரசியல் பேச முயற்சிக்கின்றனர். ஆனால், அவர் அரசியல் பேசுவதில்லை.

    இந்நிலையில தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் கதவு முன்பு, 'அரசியல் துறவறம்' என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், "தினசரி காலை 10 மணி முதல் முற்பகல் 12 மணி வரை ராமதாஸை சந்திக்கலாம். அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் ராமதாஸை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    A signboard reading "Please do not discuss politics" has been placed at the Thailapuram residence of PMK founder Ramadoss. As he has renounced active politics, a banner has been displayed outside the house requesting visitors not to engage in political discussions.