கந்தசஷ்டி முதல் நாள்.. திருச்செந்தூரில் வள்ளி, தெய்வானையுடன் தங்கதேரில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முதலாம் நாள் இரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தங்கத்தேரில் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இந்த கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

திருவிழாவின் முதல் நாள் காலை சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். அதன்பின் யாகசாலை பூஜையுடன் துவங்கிய கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. அதனையடுத்து இரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார்.
அங்கும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் சுவாமி தங்க தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வா வா முருகா வடிவேல் முருகா என்று கோஷங்கள் முழங்க மடி ஏந்தி வரம் கேட்டபடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.


Click it and Unblock the Notifications
