எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

  • சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பு மனுவில் சொத்து, வருமான விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, வெற்றி பெற்று, எம்எல்ஏவாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், சொத்து, வருமான விவரங்களை எடப்பாடி பழனிசாமி மறைத்துள்ளதாகக் கூறி, எடப்பாடி தொகுதி வாக்காளர் சக்திவேல் பெருமாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    Advertisement

    அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவில் சொத்துகள் குறித்து முழுமையான விவரங்களை தெரிவிக்கவில்லை என்றும், 2021, 2026 ஆம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஒப்பிட்டால், ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இதேபோல வழக்குகளில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடம் பிடித்த நிலையில் அக்கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அவரது தரப்பினருக்கு ஆறுதல் அளித்துள்ளது.

    English Summary

    Madras High Court has dismissed a petition seeking a directive to the Income Tax Department to conduct an inquiry into AIADMK General Secretary Edappadi Palaniswami for allegedly concealing details regarding his assets and income in his nomination papers.