செந்தில் பாலாஜியை பழிவாங்குவதே நோக்கம்.. 19 மாதம் சிறையில் இருந்து பழகியவர்.. ஆர்.எஸ்.பாரதி சவால்!

  • சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்கு போடுகிறார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். செந்தில் பாலாஜி ஏற்கனவே 19 மாதங்கள் சிறையில் இருந்து பழக்கப்பட்டவர் என்று கூறிய ஆர்.எஸ்.பாரதி, இந்த மாதிரி வழக்கெல்லாம் போடுவதால் திமுகவை அழித்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தவெக ஆட்சி அமைத்த நாளில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை முதல்வர் விஜய் தூசி தட்டி இருந்தார். திடீரென தவெக எம்எல்ஏ-க்கள் குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி தொடர்புபடுத்தப்பட்ட சூழலில், அவரை கைது காவல்துறையினர் தீவிரமாக இருந்தனர். ஆனால் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்று விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

    Advertisement

    இதனிடையே செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டினர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி, முன் ஜாமீன் பெற்றுள்ளார். செந்தில் பாலாஜியை கைது செய்யவும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    இதனால் செந்தில் பாலாஜி தவெக அரசால் குறி வைக்கப்படுவதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட உடன், திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்தது. இதனால் அவரை பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார்கள்.

    Advertisement

    அவர் ஏற்கனவே 19 மாதங்கள் சிறையில் இருந்தவர்.. யாரையும் வழக்கு போட்டு அழித்துவிட முடியாது. திமுகவையும் வீழ்த்திட முடியாது. சிபிஐ வழக்குகளை திமுக பார்த்திருக்கிறது.. 2001ல் கலைஞர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். அதில் ஒரு எஃப்ஐஆர் கூட போட முடியவில்லை. அதனால் வெறும் செய்திக்காக வழக்கு போடுவார்கள். பொய் வழக்குகளை போடுவதில் தான் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டில் ஒரு அரசு நடப்பதற்கான அடையாளமே தெரியவில்லை.. மேகதாது விவகாரம், நீட் போராட்டம் என்று ஏராளமான பிரச்சனைகள் நடந்து வருகின்றன. அதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லப்படவில்லை. விஜய் கர்நாடகா போவதாக சொல்கிறார்கள். அதைப் பற்றி கூட ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மின் வெட்டு மற்றும் மின் கட்டணம் உயர்வு குறித்து ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.

    Advertisement

    அதற்கு அமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை. மின் கட்டணத்தை அதிகமாக வசூல் செய்வதன் மூலமாக மக்களிடம் இருந்து பணத்தை திருடுகிறார்கள். இதுவும் ஒரு வகையான மோசடி தான் என்று சாடியுள்ளார்.

    English Summary

    Senthil Balaji: RS Bharathi Accuses Opponents of Targeting Former Minister Senthil Balaji Out of Vengeance