தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்?

  • சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பான 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரில் ஒருவர் ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    தமிழக காவல்துறையின் மிகவும் உயரிய பொறுப்பு என்றால் சட்டம் ஒழுங்கு டிஜிபி தான். இவர் தான் காவல்துறையின் தலைவர் ஆவார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் செயல்பட்டு வந்தார்.

    Advertisement

    கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதன்பிறகு புதிய டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு சார்பில் நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கடராமன் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். கடும் எதிர்ப்புக்கு நடுவே முந்தைய திமுக அரசு அவரை தற்காலிகமாக இந்த பணியில் நியமனம் செய்தது.

    அதன்பிறகு சட்டசபை தேர்தலையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையம் அதிரடியாக அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தது. அப்போது தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அவருக்கு பதில் சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார். அவர் உடனடியாக பதவியேற்று கொண்டார். தற்போதும் சந்தீப் ராய் ரத்தோர் தான் டிஜிபியாக இருக்கிறார்.

    Advertisement

    இருப்பினும் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 10 பேர் கொண்ட சீனியர் ஐபிஎஸ்களின் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள் ஆகியோரது பெயர்களை மத்திய அரசு தமிழக டிஜிபிக்கு பரிந்துரைத்தது. ஆனால் தமிழக அரசு ஏற்கவில்லை. இதையடுத்து டிஜிபி நியமனம் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் தான் தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான இன்று டெல்லியில் யுபிஎஸ்சி குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டின் அரசு தலைமை செயலாள் சாய்குமார் மற்றும் உள்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் டிஜிபியாக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ராத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    இந்த 3 பேரில் ஒருவரை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இறுதி செய்யும். அதன்பிறகு அவர் தமிழக காவல்துறை தலைவராக (சட்டம் ஒழுங்கு டிஜிபி) பொறுப்பேற்பார். இதனால் இன்னும் சில நாட்களில் தமிழகத்தின் டிஜிபியாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ராஜீவ் குமார் யார்?

    இந்த பட்டியலில் உள்ள ராஜீவ் குமார் 1992ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பீகாரை சேர்ந்த இவர் தமிழ்நாட்டில் வெவ்வேறு பொறுப்புகளில் திறமையாக செயல்பட்டார். இவர் மத்திய அரசு பணியில் இந்தோ - திபெத் எல்லை போலீசின் ஐிஜியாகவும் பணியாற்றினார். தமிழக சட்டசபை தேர்தல் சமயத்தில் இவர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் விஜிலன்ஸ் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் காவலர் பயிற்சி பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் ராஜீவ் குமாரின் பெயர் தமிழக டிஜிபி பொறுப்புக்கு டாப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    சந்தீப் ராய் ரத்தோர் யார்?

    இதில் சந்தீப் ராய் ரத்தோர் 1992ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கோவையில் துணை கமிஷனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கிய பங்காற்றியவர். சென்னை - ஆவடியில் பணி சென்னை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றியபோது சிக்னல் விளக்குகளுக்கு பதில் எல்.இ.டி சிக்னல்களை அறிமுகம் செய்தார். சிபிசிஐடி எஸ்பியாக பணியாற்றியபோது முத்திரை தாள் மோசடி வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்வதில் கவனம் பெற்றார்.

    Advertisement

    2019ல் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். இதுதவிர தேசிய மீட்பு படை தலைவராவும் செயல்பட்டார். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் கமிஷனராக பணியாற்றினார். பிறகு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார்.

    சென்னை கமிஷனராக பணியாற்றியவர் சென்னை மாநகர கமிஷனராக பணியாற்றியபோது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது. இது சென்னையில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதங்களை எழுப்பிய நிலையில், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்தது. சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் அவரை தமிழக சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக அவர் நியமனம் செய்யப்பட்டார்.

    மகேஷ் குமார் அகர்வால் யார்?

    அதேபோல் மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவர் 1994ம் ஆண்டில் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். தேனி, தூத்துக்குடி எஸ்பியாக பணியாற்றிவர். சிபிசிஐடி ஐஜியாகவும், சென்னை போலீஸ் கமிஷனராகவும், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி, தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றினார். அதன்பிறகு மத்திய அரசு பணிக்கு சென்றார். எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குநராக பணியாற்றி வரும் நிலையில் டிஜிபியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu DGP: UPSC clears panel of three senior IPS officers for the post of DGP/Head of Police Force, TamilNadu police sources say. One of them will be appointed to the top post within a day or two. Panel includes Rajeev Kumar, Sandeep Rai Rathore and Mahesh Kumar Aggarwal.