தாய்லாந்தில் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி மருத்துவம்! அப்படி என்ன ஸ்பெஷல்? தமிழகமும் கற்கும் பாடம்
சென்னை: தாய்லாந்து நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை முன்மாதிரியாக கொண்டு, தமிழகத்திலும் அரசு மருத்துவ சேவைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக தாய்லாந்து சென்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலான குழு, அந்நாட்டின் சுகாதார அமைப்புகளை பார்வையிட்டு பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்துள்ளது. தாய்லாந்து மருத்துவக் கட்டமைப்பில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது? தமிழகத்துக்கு அது எந்த வகையில் உதவும்? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் சமீபத்தில் தேசிய சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், துறைச் செயலாளர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் எஸ். அனீஷ் சேகர் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றது.

அமைச்சர் அருண்ராஜ்
இந்த பயணத்தின்போது தாய்லாந்தின் முக்கிய சுகாதார அமைப்புகள், மருத்துவமனைகளை நேரில் பார்வையிட்டு, அங்கு மக்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். குறிப்பாக, ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு எதுவுமே இல்லாமல், எல்லாருக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைப்பதற்காக அந்நாடு பின்பற்றும் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்தப் பயணம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் 2 நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "தாய்லாந்துக்கும், தமிழகத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. அதனால், அந்த நாட்டின் மருத்துவ அனுபவங்கள் தமிழகத்திற்கு பயன்படும். அங்கு, சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு நிறுவனம் செயல்படுகிறது. அந்நிறுவனம் ஒரு புதிய மருந்தையோ, சிகிச்சையையோ, அரசின் இலவச மருத்துவ திட்டத்தில் சேர்ப்பதற்கு முன்பு, அதன் பயன், செலவு போன்றவற்றை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
அரசு மருத்துவமனைகள்
அத்துடன், மருத்துவமனைகளுக்கு எந்த அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது என்பதும் முக்கியம். சரியான முறையில் நிதி வழங்காவிட்டால், தேவையற்ற சிகிச்சைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதையும் இந்த அமைப்பு விளக்குகிறது.
மக்களின் வீடுகளுக்கு சென்றே, நோயாளிகளை தொடர்ந்து கவனித்து கொள்கின்றனர். அதே போல, தேசிய சுகாதார பாதுகாப்பு அலுவலகம் செயல்படுகிறது. இந்த அமைப்பு எந்த மருத்துவமனையையும் நேரிடையாக நடத்துவது இல்லை. மாறாக, ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மக்களின் மருத்துவ சேவைக்கு நிதி வழங்குகிறது.
அனைவருக்கும் ஒரே மருத்துவம்
தாய்லாந்து தன் மருத்துவமனை சேவைகளை ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமானதாக உருவாக்கி உள்ளது. அதே போல், ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி, அனைவரும் சிகிச்சை பெறும் வகையில், மருத்துவ சேவைகளை உருவாக்குவது, தமிழக அரசின் நோக்கம்.
இந்த பயணத்தில் கற்றறிந்தவை குறித்து, முதல்வருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதே போல், தாய்லாந்தின் சுகாதார அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வழிவகை செய்யப்படும்" என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.
தாய்லாந்து மருத்துவ கட்டமைப்பு
இந்த நிலையில், தாய்லாந்து நாட்டை பின்பற்றி தமிழகத்திலும் அரசு மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தாய்லாந்தின் தேசிய சுகாதாரப் பாதுகாப்பு அலுவலகம் எந்த மருத்துவமனையையும் நேரடியாக நடத்துவதில்லை. மாறாக, ஆரம்ப சுகாதார மையங்களில் பதிவு செய்துள்ள மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்க நிதி ஒதுக்குகிறது.
அதேபோல், அங்குள்ள பான் சாங் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 3,196 குடும்பங்களை சேர்ந்த 11,874 பேர் தொடர் சிகிச்சைக்காக பதிவு செய்திருக்கிறார்கள்.. இவர்களில் 719 பேர் சர்க்கரை நோயாளிகள், 1,512 பேர் உயர் ரத்த அழுத்த நோயாளிகள். இவர்களுக்கு மருத்துவ கண்காணிப்பு வழங்கப்படுவதுடன், வீடுகளுக்கே சென்று தொடர்ந்து கவனிக்கும் முறையும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பயணத்தில் கற்றறிந்த விவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும், தாய்லாந்தின் சுகாதார அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏன் தாய்லாந்து ஸ்பெஷல்?
தாய்லாந்தின் மருத்துவ கட்டமைப்பில் முக்கியமான ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? அனைவருக்கும் மருத்துவப் பாதுகாப்பு கிடைக்கச் செய்திருப்பதுதான்...
அங்கே ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமேயில்லாமல் எல்லாருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. இதற்காக கடந்த 2002-ம் ஆண்டிலேயே அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் திட்டத்தை அந்நாடு செயல்படுத்தத் தொடங்கியது. இதன் மூலம் பெரும்பாலான மக்களுக்கு அரசின் உதவியுடன் மருத்துவச் சிகிச்சை கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் மட்டுமே சிகிச்சை அளிப்பது என்றில்லாமல், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் கிராம சுகாதாரத் தன்னார்வலர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று உடல்நிலையை கண்காணிக்கின்றனர்.
மருத்துவ செலவு கட்டுப்பாடு
இன்னொரு முக்கியமான விஷயமும் அங்கு உள்ளது... மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்தும் முறை வியப்பை தருகிறது.. அதாவது ஒரு புதிய மருந்தையோ, சிகிச்சையையோ அரசு மருத்துவத் திட்டத்தில் சேர்ப்பதற்கு முன்பு, அது நோயாளிகளுக்கு எந்த அளவுக்கு பயன் தரும், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை ஆய்வு செய்கிறார்களாம்..
அதேபோல், ஒவ்வொரு மருத்துவமனையிலும் எத்தனை பேர் சிகிச்சைக்காக பதிவு செய்துள்ளனர், அவர்களுக்கு என்னென்ன மருத்துவ வசதிகள் தேவைப்படுகின்றன என்பதை பொறுத்து அரசின் நிதி வழங்கப்படுகிறது. இதனால் தேவையற்ற சிகிச்சைகளை தவிர்த்து, மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை சரியான முறையில் வழங்க முடிகிறது.
புகையிலை, மதுபானப் பொருட்கள்
முக்கியமாக, தாய்லாந்தில் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், நோய்கள் வராமல் தடுப்பதற்கும் தனி அமைப்பு செயல்படுகிறது. Thai Health Promotion Foundation என்ற இந்த அமைப்புக்கு, புகையிலை மற்றும் மதுபானப் பொருட்கள் மீதான வரி மூலம் கிடைக்கும் வருவாயில் 2 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டு மக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதேபோல், புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை அரசின் இலவச மருத்துவத் திட்டத்தில் சேர்ப்பதற்கு முன்பு, அவற்றால் நோயாளிகளுக்கு எந்த அளவுக்கு பயன் கிடைக்கும், அதற்கான செலவு எவ்வளவு என்பதை HITAP என்ற அமைப்பு ஆய்வு செய்கிறது. இதனால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடிகிறது. மேலும், ராமாதிபோதி மருத்துவமனையில் நோயாளிகளின் மருத்துவப் பதிவுகள் மின்னணு முறையில் பராமரிக்கப்படுகின்றன.
மருத்துவமனையின் வெவ்வேறு பிரிவுகளும் இந்த பதிவுகளை பயன்படுத்துவதால், நோயாளிகளின் முந்தைய மருத்துவ விவரங்களை எளிதாக பார்த்து தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிகிறது.
தமிழ்நாடு இனி தாய்லாந்து போல
அதனால்தான் நம்முடைய தமிழகத்திலும் ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது, நோயாளிகளை தொடர்ந்து கண்காணிப்பது, மருத்துவச் செலவுகளை முறைப்படுத்துவது போன்றவற்றில் தாய்லாந்தின் அனுபவங்களை பயன்படுத்த முடியுமா என்பதை அரசு ஆராய்ந்து வருகிறது. ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாக உள்ளது.
அப்படியிருக்கும்போது, தாய்லாந்து போன்ற மருத்துவ சேவைகளைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால், எந்தவிதமான பாகுபாடு, வித்தியாசமின்றி அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதுடன், நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் வசதியும் மேம்படும்...!!!


Click it and Unblock the Notifications
