திருச்சி கிழக்கு தொகுதியில் திரிஷா? ரகசியமாக சர்ச்களில் தொடங்கிய பிரச்சாரம்.. வேலையை தொடங்கிய தவெக!
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகை திரிஷாவை களமிறக்குவதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக பனையூர் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதியில் இருக்கும் தேவாலயங்களில் திரிஷாவுக்கு வாக்கு சேகரிக்கும் ரகசிய பணிகளும் தொடங்கிவிட்டதாக பேச்சுகள் அடிபடுகிறது.
சட்டசபைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதி விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பின் பெரம்பூர் எம்எல்ஏ-வாக தொடரும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. நவம்பர் மாத இறுதியில் திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விஜய் போட்டியிட்ட தொகுதியில் தவெக சார்பாக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக தவெக தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி களமிறங்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் கோவையில் நடிகை திரிஷா நடத்திய ரோடு ஷோ தமிழக அரசியலின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் விஜய்யுடன் திரிஷா காட்டி வரும் நெருக்கமும் பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது. இதனால் விஜய் இடத்தில் நடிகை திரிஷா திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே திருச்சி திமுக முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் குறி வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் இருக்கும் தேவாலயங்களில் நடிகை திரிஷாவுக்காக ரகசியமாக வாக்கு சேகரிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டது தெரிய வந்துள்ளது. ஆனால் திருச்சி கிழக்கு வேட்பாளர் குறித்து விஜய் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.. இதனால் திரிஷாவை மாநிலங்களவை எம்பி-யாக்கலாம் என்றும் அவரின் ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு பின் தவெகவில் அடுத்த இடத்தில் இருப்பவர்கள் யாரேனும் போட்டியிடுவார்கள் என்றே அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுக்காமல், தவெக தலைமை வேறு சில முடிவுகளை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
