சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசும்போது, 'தாய் மாமன் காது குத்தும் திட்டம்' என பெயரிடலாம் என கூறினார். அதற்கு பதில் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன், "நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தொியும் என்று உதயநிதி கூறியதுதான் மிகப்பொிய காதுகுத்து" எனத் தெரிவித்தார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் காரசார விவாதம் நடைபெற்றது. இன்றைய காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் அரசு, தாய் மாமன் காது குத்தும் திட்டம் என மொத்தமாக பெயரிடலாம் எனக் கூறினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், "உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தொியும் என்று உதயநிதி கூறியதுதான் மிகப்பொிய காதுகுத்து. மெரினா கடற்கரைக்கு பூட்டு போட்டதில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு 'முனைவர் பட்டம்' பெற்றுள்ளது. தற்போது ஆளுங்கட்சி மற்றும் அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை செயல்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் மகளிர் காவல்துறையிடம் செல்லலாம். ஆனால் கடந்த திமுக ஆட்சியில் விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் பெண் காவல்துறை அதிகாரியிடமே சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார் திமுக உறுப்பினர். அவர்களுக்கே பாதுகாப்பில்லாத ஒரு ஆட்சியை நடத்திவிட்டு எங்களை பார்த்து பேசுவதா? எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், குற்றவாளிகள் மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்கும். சட்டம் - ஒழுங்கில் சிறப்பான இடத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம், ஆளுங்கட்சி தலையீடு இல்லாத காவல்துறை, எந்தக் கட்சியினர் குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் 'விஜய் சர்க்கார்' தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் பெண்ணின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர் முதற்கொண்டு அனைத்தையும் முதல் தகவல் அறிக்கையில் வெளியிட்டு மிகப்பெரிய தவறை செய்தது திமுக அரசு" எனத் தெரிவித்தார்.