தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அறிவிக்க வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு வேல்முருகன் வைத்த கோரிக்கை

  • சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாய்மாமன் சீராக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    இது குறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் சுமார் 4,787 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இக்கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. இந்நிலையில், தமிழக அரசு கடந்த 12 ஆம் தேதி 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இக்கடைகள் மூடப்பட்ட பிறகு, கடை அருகே உள்ள சந்துகளில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் தடையின்றி விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    கிராம சபை கூட்டங்களில் மதுபானக் கடையை மூடச் சொல்லி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், கடந்த கால அரசுகள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தினசரி சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் இந்த விற்பனை இரட்டிப்பாக அதிகரிக்கிறது.

    மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எனவே, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசு மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுக் குடிப்பகங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இது தமிழக பெண்களுக்கு தமிழக அரசு அளிக்கும் மிகப் பெரிய பரிசாக அமையும்.

    Advertisement

    இதைவிட பெரிய பரிசு என்றால் அது பூரண மதுவிலக்கே. தமிழக பெண்களுக்கு உண்மையான தாய்மாமன் சீராக அமையும். எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று இந்தச் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் பிரச்சாரங்களின் போதும், கட்சியின் கொள்கை பிரகடனத்தின் போதும் பெண்களின் நலனுக்காக முன்வைத்த மிக முக்கியமான முழக்கம் தான் இந்த "தாய்மாமன் சீர்" என்பது. அதனையே சுட்டிக்காட்டி, வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

    English Summary

    Velmurugan, leader of the Tamizhaga Vazhvurimai Katchi and a former MLA, has urged CM Vijay that an announcement regarding total prohibition in Tamil Nadu be made during the state legislative assembly session.