விஜய்க்கு பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு.. தெலுங்கானா முதல்வருக்கு தடை போட்டது ஏன்? சலசலப்பு!

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்திற்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கிட்டத்தட்ட ஒரு வார வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர், தமிழக முதல்வர் விஜய்யை சந்திக்க விரும்பியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வந்துள்ளார். 13 ஆம் தேதி டெல்லியில் மாநாடு நிறைவுற்றவுடன் சென்னை வர திட்டமிட்ட மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச விரும்பியுள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், முதல்வர் விஜய் லண்டன் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக ஆளுநர் மாளிகை மூலமாக முயன்றுள்ளனர். இதையடுத்து, ஆளுநர் அர்லேகர், முதல்வர் விஜய்யிடம், லண்டன் விசிட்டை தள்ளி வைத்துவிட்டு, மலேசியர் பிரதமருடன் சந்திக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    ஆனால், இதனை மறுத்த முதல்வர் விஜய், வெளிநாட்டுப் பயணத் திட்டம் வெகு முன்னரே இறுதி செய்யப்பட்டிருந்ததால், அப்பயணத்தை மாற்றி அமைப்பது சாத்தியமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே, நேற்று முன்தினம் லண்டன் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் விஜய்.

    இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்தில் மேற்கொண்டு வரும் அதிகாரப்பூர்வ பயணத்திற்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி இந்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரி, "பாதுகாப்பு உட்பட, பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம்தான் செய்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அண்டை மாநிலமான தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, 10 நாள்கள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்குச் செல்வதற்காக ஆகஸ்ட் 20 ஆம் தேதி டெல்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் சென்றடைந்தார்.

    லண்டன் நகரத்தில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பிரிட்டன் மற்றும் அமெரிக்க பயணங்களுக்கு முறைப்படி மத்திய அரசிடம் அனுமதி கோரியதாகவும், ஆனால், பிரிட்டன் பயணத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    லண்டனில் இருக்கும் முதல்வர் ரேவந்த் ரெட்டி அங்கிருந்து அமெரிக்காவுக்குச் செல்ல மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துவிட்டு லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார் ரேவந்த் ரெட்டி.

    Advertisement

    ரேவந்த் ரெட்டி தலைமையிலான "ரைசிங் தெலுங்கானா" குழுவினர் பிரிட்டன் சென்ற பிறகே அமெரிக்க பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றும் தெலுங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. தெலுங்கானா முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு அனுமதி மறுத்த மத்திய அரசு, தமிழக முதல்வர் விஜய்யின் லண்டன் ட்ரிப்புக்கு பச்சைக்கொடி காட்டியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay’s trip to UK was cleared by Ministry of External Affairs, says official. Whereas Telangana CM Revanth Reddy's overseas visit was stopped by centre.