தவெகவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? எதிர்க்கட்சிகள் திட்டம்? ரிசார்ட் போகும் தவெக MLAக்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தலைமையில் அமைந்த தமிழக வெற்றிக் கழகம் அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. புதிய ஆட்சி அமைத்த உற்சாகம் தணிவதற்குள், எதிர்பாராத அரசியல் நெருக்கடிகள் தவெக தலைமைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் விஜய் அவசரமாகக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் அனைவரும் எவ்வித விலக்கும் இன்றி கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

dmk

கூட்டத்திற்கான காரணம் ஒழுங்கு நடவடிக்கை கூட்டம் என்று வெளியே சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மான வியூகம் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைக்க நடக்கும் தீவிர குதிரை பேர முயற்சிகள் அடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 மாதங்கள் நிறைவு: நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம்

சட்டமன்ற விதிகளின்படி, ஒரு புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல் ஆறு மாதங்களுக்கு அதன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாது. ஆனால், தற்போது தவெக அரசு ஆறு மாத காலத்தை நிறைவு செய்துவிட்டதால், இந்தத் தடையை தாண்டிவிட்டது.

சமீப நாட்களாக தவெக எம்.எல்.ஏ.க்கள் மீது எழுந்துள்ள தொடர் புகார்களைக் கையில் எடுத்து, சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ரகசிய வியூகம் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. குறைந்த பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை நடத்தி வரும் சூழலில், சட்டமன்றத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஸ்திரத்தன்மையை அசைத்துப் பார்க்க எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன.

எம்.எல்.ஏ.க்களை விலைபேச முயற்சி? தவெக தலைமை எடுத்த அதிரடி முடிவு

இதற்கிடையே, தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தங்கள் பக்கம் இழுக்கும் 'குதிரை பேரம்முயற்சிகள் பின்னணியில் மும்முரமாக நடப்பதாக தவெக மற்றும் உளவு பிரிவு கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, ஆரம்ப காலத்தில் இருந்தே 'விஜய் மக்கள் இயக்கம்' வழியாக வந்த விசுவாசமான நிர்வாகிகளைத் தவிர்த்து, தேர்தல் நேரத்தில் பிற கட்சிகளில் இருந்தும் வெளியிலிருந்தும் வந்து தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து சிலர் பேரம் பேச முயன்றதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.க்களிடம் கோடிக்கணக்கில் பணம் மற்றும் பதவிகள் பேசி வலை வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நகர்வை முன்கூட்டியே மோப்பம் பிடித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், உடனடியாகத் தலையிட்டு அந்தப் பேரம் பேசும் முயற்சிகளை முறியடித்துள்ளனர். மேலும், கட்சியையும் ஆட்சியையும் கவிழ்க்க நடக்கும் சதியை முறியடிக்கவும், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் நேரில் அழைத்து அவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும் இந்த அவசரக் கூட்டத்தை முதல்வர் விஜய் கூட்டியுள்ளார்.

3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 அமைச்சர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை?

ஒருபுறம் ஆட்சிக்கு வரும் அச்சுறுத்தல் என்றால், மறுபுறம் சொந்தக் கட்சி மக்கள் பிரதிநிதிகளின் வரம்பு மீறிய செயல்பாடுகள் அரசுக்குக் கடுமையான அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இரண்டு முக்கிய விவகாரங்கள் தவெக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன:

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு செல்போனில் தொடர்ந்து தகாத மற்றும் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாகவும், நள்ளிரவில் மதுபோதையில் ஆட்சியர் வீட்டுக்குச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆட்சியரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, அவருக்குத் தனி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அரசு நிர்வாகத்தின் முக்கியத் தூணான ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

துறையூர் தொகுதியைச் சேர்ந்த தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் மீது எழுந்த நேரடித் தாக்குதல் சர்ச்சை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தங்கள் பகுதியில் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என்று முறையிட வந்த கார்த்திக் குமார் என்ற உள்ளூர் வாக்காளரை துணை சபாநாயகர் தாக்கிய வீடியோ வெளியாகி வைரலானது. "விஜய்க்குத்தான் ஓட்டுப் போட்டேன்" என்று கதறியபோதும் தாக்குதல் தொடர்ந்ததாக கார்த்திக் குமார் குற்றம்சாட்டினார். பின்னர் மிரட்டப்பட்டு மறுப்பு வீடியோ வெளியிட வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். துணை சபாநாயகரே வாக்காளரைத் தாக்கியது அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ரிசார்ட் திட்டம்

எதிர்க்கட்சிகளின் குதிரை பேர வலையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் சிக்காமல் பாதுகாக்கும் வகையில், அவசர ஆலோசனைக் கூட்டம் முடிந்த கையோடு அவர்கள் அனைவரையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள பிரபல நட்சத்திர விடுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கவைத்து, அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோடு வெளிநபர்கள் யாரும் தொடர்புகொள்ள முடியாத வகையில் பலத்த போலீஸ் மற்றும் கட்சிப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரவும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, அமைச்சரவையில் உள்ள இரண்டு முக்கிய அமைச்சர்கள் மீதும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்வாக குளறுபடிகள் தொடர்பான புகார்கள் முதல்வரின் கவனத்திற்குச் சென்றுள்ளன.

பதவி பறிபோகுமா? முதல்வர் விஜய்யின் எச்சரிக்கை

கட்சியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 அமைச்சர்கள் குறித்து முதல்வர் விஜய் தனி விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

"தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.. அமைச்சராக இருந்தாலும் சரி, துணை சபாநாயகராக இருந்தாலும் சரி, அராஜகத்தில் ஈடுபட்டால் உடனடியாகப் பதவி பறிக்கப்படும்" என விஜய் உறுதியாக இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய ரவிசங்கருக்கு உத்தரவிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமை எடுக்கும் இறுதி முடிவு என்ன?

வெளிப்புறத்தில் இருந்து வரும் குதிரை பேர மிரட்டல்களை முறியடித்து எம்.எல்.ஏ.க்களை ஒரே அணியில் திரட்டி வைப்பது ஒரு பக்கம்.. மறுபக்கம் வரம்பு மீறிய எம்.எல்.ஏ.க்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது இன்னொரு பக்கம் என முதல்வர் விஜய் இரட்டைச் சவாலை எதிர்கொண்டுள்ளார்.

நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், ஒழுங்கு நடவடிக்கைகளும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அடுத்த சில மணி நேரங்களில் நடக்கவிருக்கும் இந்த நகர்வுகள் பெரும் திருப்புமுனையாக அமையக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+