சிக்ஸர் போட்ட தவெக.. அவரை எப்படி கூப்பிட முடியும்? மாறிய எடப்பாடி ரூட்? தினகரன் வசம் போகுதா அதிமுக

  • சென்னை: டிடிவி தினகரனை அதிமுகவில் மறுபடியும் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற துவங்கி உள்ளது.. இப்படியான கோரிக்கை 6 வருட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்தும், எடப்பாடி பழனிசாமி அதற்கு செவிசாய்க்கவில்லை.. அவரது பிடிவாதம் தொடர்ந்தபடியே உள்ளது.. இப்போது அதிமுகவின் நிலைமை படுமோசமாகி வரும்நிலையில், மீண்டும் இதே கோரிக்கை எழுப்பப்பட்டு, மீண்டும் எடப்பாடி மறுப்பு சொல்லி உள்ளார். இதன் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? நிர்வாகிகள் என்ன செய்ய போகிறார்கள்?

    Advertisement

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் மிகப் பெரிய உட்கட்சி பூசல்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி விட்டது. அதிலும் நடிகர் விஜய்யின் தவெக திடீரென விஸ்வரூபம் எடுத்துவிடும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    Advertisement


    எடப்பாடி பழனிசாமி பிடிவாதம்

    இந்த தவெக, அதிமுகவின் அசைக்க முடியாத வாக்கு வங்கியை அடியோடு சரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள், சில எம்எல்ஏக்கள் தவெக பக்கம் நோக்கி நகர தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கட்சியில் வலுவான, ஆளுமை மிக்க முக்கிய முகங்கள் பெரும்பாலானோர் இல்லாதது இப்போதைய அதிமுகவிற்கு பலவீனமாகவே மாறியிருக்கிறது.

    இப்படியான இடியாப்ப சிக்கல்களுக்கு மத்தியில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், கும்பகோணம் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசும்போது, டெல்டா மாவட்டங்களில் கட்சியின் பலவீனமான நிலையையும், கட்சியை அடிமட்டம் வரை சீரமைப்பது குறித்தும் விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள்.

    Advertisement


    டிடிவி தினகரன் வசம் அதிமுக?

    அப்போதுதான் கூட்டத்தில் கலந்து கொண்ட தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த குரலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் உடனடியாக அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற அதிரடிக் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமியிடம் முன்வைத்துள்ளனர்.

    பொதுவாக, இதுபோன்ற அதிமுக கூட்டங்களில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என்று இவர்களில் யார் பெயரையாவது உச்சரித்தாலே, எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகிவிடுவார்.. உடனடியாக குறுக்கிட்டு, "அவர்களைப் பற்றிய பேச்சு முடிந்துபோன விஷயம், கட்சியின் வளர்ச்சி பற்றி மட்டும் பேசுங்கள்" என்று கறாராக பேச்சை மாற்றிவிடுவார்.

    ஆனால் இந்த முறை தஞ்சை நிர்வாகிகள் தவெகவின் அச்சுறுத்தல் மற்றும் தென் மாவட்டங்களின் சறுக்கல் குறித்து பேசியபோது எடப்பாடி பழனிசாமி அமைதியாக கேட்டுக் கொண்டாராம்.. "தினகரன் தனியாக ஒரு கட்சியை நடத்தி வருகிறார், அவரை நாம் எப்படி அழைக்க முடியும்?" என்ற நடைமுறைச் சிக்கலை மட்டுமே எடப்பாடி எடுத்துரைத்தாராம்..

    Advertisement

    வழக்கமான கோபத்தைக் காட்டாமல் இபிஎஸ் மவுனம் காத்தது, அவரது சம்மதத்திற்கான முதல் அறிகுறியாக இருக்குமோ? என்ற விவாதத்தை இது கிளப்பியுள்ளது.

    அதிமுக பலவீனமாகிறதா

    கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பேயே டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் முழுமையாக சேர்த்திருக்க வேண்டும் என்று டெல்லி பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. எதிர்க்கட்சித் தரப்பில் வாக்குகள் சிதறுவதைத் தடுக்கவும், அதிமுக ஆதரவு வாக்குகளை முழுமையாக ஒருங்கிணைக்கவும் தினகரன் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால், எடப்பாடி பழனிசாமி தனது தனிப்பட்ட அரசியல் பிடிவாதத்தால் அதைத் தொடர்ந்து மறுத்து வந்தார். அதன் விளைவாகவே, தென் மாவட்டங்களிலும் டெல்டாவிலும் அதிமுக பல இடங்களில் தவெக-விடம் தோற்று, 3வது இடத்திற்குத் தள்ளப்படும் அவல நிலைக்கு ஆளானது. தென் மாவட்டங்களில் ஆர்.பி. உதயகுமாரை மட்டுமே எடப்பாடி பழனிசாமி முழுமையாக நம்பியிருந்தார். ஆனால், அங்கு அதிமுக மிக மோசமான படுதோல்வியைச் சந்தித்தது, இபிஎஸ்ஸின் அரசியல் கணக்குகளை சுக்குநூறாக உடைத்துள்ளது.

    Advertisement

    டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டு வருவதன் மூலம் கட்சிக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்னமும் சசிகலா மற்றும் தினகரனுக்கான பாரம்பரிய வாக்கு வங்கி அப்படியே உயிர்ப்புடன் உள்ளது.

    தென் மண்டல வாக்கு வங்கி

    தினகரன் உள்ளே வந்தால், சிதறிப் போயிருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் மீண்டும் முழுமையாக அதிமுகவிற்குத் திரும்பும். மாற்றுக்கட்சிகளை நோக்கி, குறிப்பாக தவெக-வை நோக்கி நகரத் துடிக்கும் அதிமுக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தடுத்து நிறுத்தி, கட்சியைப் பலப்படுத்த முடியும். பலமான ஒரு கூட்டணியை அமைத்து, திமுக மற்றும் தவெக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் துணிச்சல் கட்சிக்குக் கிடைக்கும்.

    Advertisement

    ஆனால் அதேசமயம், தினகரனின் வருகை எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு சில மைனஸ்களையும் ஏற்படுத்தலாம். கட்சியில் இத்தனை காலம் எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஒற்றைத் தலைமையாகத் திகழ்ந்தார். தினகரன் உள்ளே வரும்போது, தென் மாவட்டங்களின் முழு அதிகாரமும், கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் ஆளுமையும் தினகரன் வசம் செல்லக்கூடும். இது எடப்பாடியின் ஒற்றைத் தலைமை பிம்பத்திற்கு சவாலாக அமையலாம்.

    இருந்தாலும், தவெக அலைக்கு நடுவே அதிமுக என்ற பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டுமானால், தனது தனிப்பட்ட பிடிவாதங்களைத் தளர்த்தி, தினகரனுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துவதைத் தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழியில்லை என்பதே தற்போதுள்ள கள யதார்த்தம்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

    English Summary

    Why Is Edappadi Palanisami Changing His Strategy? Is AIADMK Moving Closer to TTV Dinakaran?