அடுத்தடுத்து முடக்கப்பட்ட யூடியூப் பக்கம்! இன்ஸ்டா நிதி ஆலோசகர் ஹரிஷ் எடுத்த முடிவால் நேர்ந்த சோகம்!

  • சென்னை: 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்கிற பெயரில், இன்ஸ்டாகிராமில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ், சென்னை முட்டுக்காடு பகுதியில் தனது வாடகை இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    யூடியூப் மற்றும் டெக் நிறுவன சிஇஓ ஜேசன் சாமுவேல், கடந்த 18ஆம் தேதி அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஹரிஷ் உரிய செபி (SEBI RIA) மற்றும் ஆம்பி(AMFI) அங்கீகாரம் அல்லது உரிமம் இல்லாமல் பொதுமக்களுக்கு நிதி ஆலோசனைகளை வழங்கி ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த பிரச்சனையை தொடர்ந்து, ஹரிசின் 13 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் youtube பக்கங்களை மெட்டா நிறுவனத்தால் முடுக்கப்பட்டன. பின்னர் அவர் தொடங்கிய புதிய பக்கங்களும் தொடர்ந்து முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மறுபுறம் சமூக வலைதளங்களில் குவிந்த கடுமையான எதிர்வினை, எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் ஆன்லைன் ட்ரோல்களால் ஹரிஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று ஹரிஸ் தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்திருக்கிறார். உயிரிழப்பதற்கு முன், ஹரிஷ் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், சாமுவேல் தனது கணக்குகளை முடக்குவதாக மிரட்டியதாகவும்.. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தன்னிடம் பணம் பறிக்க முயன்றதாகவும்.. தனது ஐந்தாண்டு கால உழைப்பு திருடப்பட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து, ஹரிஷின் தந்தை விநாயகம், ஜேசன் சாமுவேல் மீது ஆன்லைன் துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜேசன் சாமுவேல், "நான் அவரை தனிப்பட்ட முறையில் துன்புறுத்தவில்லை. உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக நிதி ஆலோசனை வழங்கியதை நுகர்வோர் நலன் கருதி மட்டுமே சுட்டிக்காட்டினேன். மோசடியை வெளிப்படுத்துவது.. தற்கொலைக்கு தூண்டுவதாக ஆகாது" என்று தனது x பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    'மன உளைச்சலோ அல்லது தற்கொலை எண்ணங்களோ ஏற்பட்டால்.. தமிழக அரசின் ஹெல்ப்லைன் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றை தொடர்பு கொண்டு இலவச ஆலோசனைகளை பெறலாம்.'

    English Summary

    Instagram Finance Advisor Harishs: Harish, an Instagram personality known as 'Finance with Harish' who provided financial advice on the platform, has died by suicide at his rented home in the Muttukadu area of ​​Chennai, an incident that has come as a shock.