Beef: மாட்டுக்கறி விவகாரம்! விசாரணை அதிகாரி மீது சந்தேகம் கிளப்பும் கோவை அகிலனின் தந்தை!

  • கோவை: கோவை பீளமேட்டைச் சேர்ந்த மாணவர் அகிலன் சாதிய ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என அவரது தந்தை அசோக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    கோவை பீளமேடு பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை அசோக்குமார் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், விசாரணை தொடர்பாக காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது: மாணவர் அகிலன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நேற்று மதியம் முதல் காவல்துறையினரிடம் காத்திருக்கிறோம். நள்ளிரவு 1.30 மணிக்குத்தான் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகல் வழங்கப்பட்டது.

    தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், சில தகவல்கள் தவறாகப் பதிவு செய்யப்படுவதாக எங்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. "மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சனை குறித்து மாணவர்களிடம் விசாரித்தபோது, அத்தகைய சம்பவமே நடைபெறவில்லை என அவர்கள் கூறுவதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே அந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளதாக" கூறுகிறார்கள் என்றார்.

    மேலும், பள்ளி நூலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தலைமை ஆசிரியருக்குத் தெரியவந்ததாகக் கூறப்படும் நிலையில், அப்போதே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்கலாமே எனக் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் அசோக்குமார் தெரிவித்தார்.

    விசாரணை அதிகாரி மீது சந்தேகம்

    விசாரணை அதிகாரியின் செயல்பாடுகள் மீது தனக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அசோக்குமார், காவல்துறையினர் தெரிவிக்கும் தகவல்களைத் தனது வாயிலாக ஒப்புக் கொள்ள வைக்க முயற்சி செய்வதை உணர்வதாகக் கூறினார்.

    "அவர்கள் எதிர்ப்பார்க்கும் வார்த்தைகளை நான் சொல்ல மாட்டேன். எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். விசாரணை நடைபெறும் விதத்தைப் பார்க்கும்போது, விசாரணை அதிகாரியை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது" என்றார்.

    கோவை ஆர்எஸ்புரத்தில் சட்டென விழுந்த ராட்சத மரம்.. கண் இமைக்கும் நேரத்தில் மேஜிக்.. 3 பேர் திக் திக்

    கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமல் இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார். கைது செய்வது குறித்து விசாரணையின் முடிவில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், சட்ட நடைமுறைகள் குறித்து தனக்குத் தெரியாவிட்டாலும், தற்போதைய விசாரணை நடைமுறையில் உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்தார்.

    விசாரணை

    மேலும், சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் அளித்த பதில்கள் குறித்த தகவல்கள் தனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அசோக்குமார் கூறினார். மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சினை குறித்து பேசவே இல்லை என மாணவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவலையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இனி எந்த அகிலனும் உயிரிழக்கக் கூடாது

    தனது மகனை இழந்த துயரத்திலும், மற்ற மாணவர்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து போராடுவதாக அசோக்குமார் உருக்கமாகத் தெரிவித்தார்.

    மாட்டுக்கறி சாப்பிடுவியா? மாணவர் உயிரை பறித்த ஒற்றை வார்த்தை! ஆசிரியர் அதிரடி கைது!

    போராட்டம் எதற்காக?

    "என் மகன் இறந்துவிட்டான். அவன் மீண்டும் எழுந்து வருவான் என்பதற்காக நான் போராடவில்லை. இனி வேறு யாருக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் போராடுகிறேன். என் மகன் திரும்பி வரமாட்டான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இனி எந்த அகிலனும் உயிரிழக்கக் கூடாது.

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சாதியின் பெயரால் மாணவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. எனக்கு வேறு எதுவும் வேண்டாம்" என்றார்.

    நீதி வேண்டும்

    மேலும், தனது மகனின் உயிரிழப்புக்கான காரணம் முழுமையாக வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றும், விசாரணை நேர்மையாக நடைபெற்று உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    கோவை பீளமேடு பகுதியில் உள்ள பள்ளியில் யாரெல்லாம் மாட்டுக் கறி சாப்பிடுவீர்கள் என்ற கேள்விக்கு, அகிலன் உள்பட 4 பேர் எழுந்து நின்ற போது சக மாணவர்களால் ஜாதிய ஒடுக்குமுறை செய்யப்பட்டதால் மனமுடைந்த மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்டார்.

    Topics: #கோவை

    English Summary

    Coimbatore Akilan's father Ashok kumar accuses that the investigation is not done properly, we have doubt on investigating officer, he has to be replaced.