ஹிந்தி கற்கலாம்.. கோவை, திருப்பூரில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை.. வைரமுத்து அதிரடி பேச்சு

  • மதுரை: கோவையிலும், திருப்பூரிலும் வட மாநிலத்தில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த கருத்தை மேலிடங்கள் ஆய்வு செய்து கலாச்சார வீழ்ச்சி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சினிமா பாடலாசியரும், கவிஞருமான வைரமுத்து பேசியுள்ளார். தேவை வரும்போது நீங்கள் ஹிந்தியை கற்றுக்கொள்ளலாம் என்றும், தமிழில் வரலாறு இருக்கிறது தமிழை குறைத்து சொல்லக்கூடிய ஒரு சமூகம் இருந்தால் அந்த சமூகம் அழிந்தே போகட்டும் என்றும் வைரமுத்து கூறினார்.

    Advertisement

    மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெற்றித் தமிழர் பேரவையின் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து பேசியபோது: மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மேடைக்கு வந்து பரிசு பெற்றபோது, 'இவர்கள்தான் நம் உறவினர்கள்; இவர்களின் பெற்றோர்கள்தான் நம் பங்காளிகள்' என்று நினைக்கிறேன்.

    Advertisement

    பணக்காரர்கள் படிப்பதற்கு மாஸ்கோ இருக்கிறது, டெல்லி இருக்கிறது, சென்னை இருக்கிறது. எங்கள் ஏழை மாணவர்கள், கல்விக்கட்டணம் கூடச் செலுத்துவதற்கு வாய்ப்பில்லாத அடித்தட்டு மக்கள் மாநகராட்சிப் பள்ளியையும் அரசுப் பள்ளியையும் நாடுகிறார்கள்.

    இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த ஆண்டு வந்திருக்கிற செய்திகள் மகிழ்ச்சியாக இல்லை. இந்த ஆண்டு வந்திருக்கிற புள்ளிவிவரங்கள், 'தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் சேருகிற மாணவர்களின் எண்ணிக்கை சடசடவென்று சரிந்திருக்கிறது' என்று ஒரு குறிப்பு தருகின்றன. அது சரியக்கூடாது!

    தனியார் பள்ளிகளில் என்னென்ன வசதிகள் உண்டோ, அந்தக்கல்வித் தரத்தின் உயர்வு, சுற்றுப்புறச் சூழலின் நேர்த்தி, பிள்ளைகளுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு-இவைகளை அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் ஏற்படுத்திக் கொடுப்பதுதான் ஓர் ஆட்சியின் முதல் கடமை என்று உறுதியாக நம்புகிறேன்.

    Advertisement

    இந்த நாட்டின் முதல் குடிமகனாக இருந்த அப்துல் கலாம் ஐயா, தமிழ் வழியில் கல்வி பயின்றவர். 'தமிழில் என்ன இருக்கிறது?' எனக் கேட்கிறீர்களே, தமிழில் ஒரு ஜனாதிபதியே இருக்கிறார்! தமிழில் வரலாறு இருக்கிறது. தமிழைக்குறைத்துச் சொல்லக்கூடிய ஒரு சமூகம் இருந்தால், அந்தச் சமூகம் அழிந்தே போகட்டும்!

    தாய்மொழியை இழக்கிற சமூகம் இந்த நாட்டிற்குத் தேவையில்லை. தாயை மதிக்கிறவனும் தாய்மொழியை மதிக்கிறவனும் மரபுகளைக் காப்பாற்றுகிறான் என்று பொருள். நீங்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது; தாய்மொழியைக் கற்ற பிறகு கற்க வேண்டும் என்ற கடமை இருக்கிறது.

    Advertisement

    'தாய்மொழிக்கும் பிற மொழிகளுக்கும் என்ன வேறுபாடு?' எனக் கேட்டார்கள். தாய்மொழி என்பது கண்ணைப் போன்றது; பிற மொழி என்பது கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது. கண் இல்லை என்றால் கண்ணாடி எதற்கு? முதலில் 'கண்' என்ற தாய்மொழி இருக்கட்டும். அதற்குப் பிறகு ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்ச் என்ற கண்ணாடிகளை அணிந்துகொள்!

    ஹிந்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கற்றுக்கொள். ஹிந்தியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவை இருந்தால் கற்றுக்கொள். ஹிந்தித் தேவை வரும்போது நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இதை ரொம்பத் தெளிவாகச் சொல்கிறேன்.

    'இந்தி கற்றுக்கொள்ளும் தேவை இருந்தால் கற்றுக்கொள்ளுங்கள்' எனச் சொல்கிறேன், ஏன் தெரியுமா? வடமாநிலத்திலிருந்து, அசாமிலிருந்து, மத்திய பிரதேசத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்யத் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள், அந்த மண்ணில் வேலைவாய்ப்பு இல்லாத இந்தியச் சகோதரர்கள். அவர்கள் வந்து இங்குப் பணிபுரிகிறார்கள். அவர்கள் இங்கு வந்தபோது தாய்மொழியை மட்டுமே அறிந்தவர்கள்.

    Advertisement

    கோயம்புத்தூரிலும் திருப்பூரிலும்தான் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தக் கருத்தை மேலிடங்கள் ஆய்வு செய்து, கலாச்சார வீழ்ச்சி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சொல்கிறேன். இந்தியன் எங்குச் சென்று வாழவும் உரிமை உண்டு. இந்திய இறையாண்மையும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அதனை அனுமதிக்கிறது.

    அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். வந்தபோது ஒருவனுக்கு அசாமி தெரியும், ஒருவனுக்கு ஹிந்தி தெரியும், ஒருவனுக்கு பீகாரி தெரியும். வந்து இரண்டே ஆண்டுகளில் நம்மோடு உறவாடி, உரையாடித் தமிழ் பேசுகிறார்கள். அவர்களுக்குத் தாய்மொழியும் தெரியும்; நம்முடைய தாய்மொழியாகிய தமிழும் தெரியும். அவனுக்குத் தமிழ் யார் கற்றுக்கொடுத்தார்கள்? வகுப்பு எடுத்தா அனுப்பினீர்கள்? காலம் அவனைத் தமிழ் கற்றுக்கொள்ள வைத்தது.

    Advertisement

    தமிழர்கள் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்றால், காலம் அவர்களுக்கு அந்தந்த மொழிகளைக் கற்றுக்கொடுக்கும். எனவே, காலத்தின் கைகளில் பிற மொழிகளை விட்டுவிடுங்கள்! தாய்மொழிதான் உங்களுக்கு லட்சியம்; உங்கள் முகம்; உங்கள் முகவரி. எனவே, தாய்மொழியைக் கற்றுக்கொண்டு, 'எந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்கும் காலமே கட்டளையிடு' என்று சொல்லுங்கள்," என்றார்.

    English Summary

    Lyricist and poet Vairamuthu stated that the number of people from North India is high in Coimbatore and Tiruppur, and urged the high command to study this matter to ensure that a cultural decline does not occur.