டெல்லி: 2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக தரப்பு மிகத் தீவிரமாக முன்னிறுத்தி வரும் நிலையில், தமிழக ஆளுங்கூட்டணிக்கு ஆதரவளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி வெளியிட்டுள்ள கருத்துக்கள் தவெக தலைமைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்திக்கே பிரதமர் பதவிக்கு உரிமை கோருவதற்கான தார்மீக உரிமை உண்டு என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் தூதர்களான மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தியை விஜய் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பியது, வட மாநிலங்களில் 'விர்ச்சுவல் வாரியர்ஸ்' மூலம் இந்தி ரீல்ஸ்களைப் பரப்பி 'தேசிய வெற்றி கழகம்' என்ற பெயரில் 100 இடங்களைக் குறிவைப்பது என தவெக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிக் கட்சியின் தேசியத் தலைவரே ராகுல் காந்தியின் தலைமையை வெளிப்படையாக வழிமொழிந்துள்ளது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளர் குறித்து தேவையற்ற கற்பனைகளையும், விவாதங்களையும் உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டார். அதே சமயம், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றால் யார் பிரதமர் நாற்காலியில் அமர்வது என்பது குறித்த எதார்த்தமான விதியை அவர் சுட்டிக்காட்டினார். "பொதுவாக, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு வகிப்பவருக்கே பிரதமர் பதவிக்கு உரிமை கோருவதற்கான உரிமை இயல்பாகவே உள்ளது. எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற பிறகு, யார் பிரதமர் என்பதை விவாதித்து ஒரு முதிர்ச்சியான முடிவை எடுக்க முடியும்" என்று அவர் தெளிவுபடுத்தினார். 1996 தேவகவுடா பாணியில் 100 இடங்களை வென்று விஜய் பிரதமராவார் என்று தவெகவினர் பேசி வருவதைக் குறிவைப்பது போல, கடந்த கால அனுபவத்தை எம்.ஏ.பேபி நினைவுகூர்ந்தார். 1996 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முன்னணி உருவானபோது, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசுவை பிரதமராக்குவது குறித்து சிபிஎம் மத்தியக் குழு தீவிரமாக விவாதித்ததை அவர் நினைவு கூர்ந்தார். எங்கள் பலத்தை வைத்துக்கொண்டு நாங்கள் பிரதமர் பதவிக்கு உரிமை கோர மாட்டோம்.. அது அபத்தமானது. அப்படி இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர்தான் இயல்பாகவே அந்த இடத்திற்கு முன்னுரிமை கோர முடியும் என்று கூறிய பேபி, தேர்தலுக்கு முன்பாக இத்தகைய ஏற்பாடுகள் குறித்த கற்பனைகளில் கட்சி ஈடுபட விரும்பவில்லை என்றார். தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய எம்.ஏ.பேபி, பாஜக வீழ்த்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் ஜோசப் விஜய்யின் பெயரும் எதிர்காலப் பிரதமருக்கான வாய்ப்பாகப் பேசப்பட்டு வருவதை நான் அறிவேன். ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட ஒரு விவாதம்.. அந்தச் சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை என்று நாசூக்காக முற்றுப்புள்ளி வைத்தார். எதிர்க்கட்சிகள் முதலில் பெரும்பான்மை இடங்களைப் பெறுவதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அடுத்த பிரதமர் யார் என்பதைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காங்கிரஸை மட்டுமே எதிர்த்துக்கொண்டு தனது தேசியப் பிரச்சாரத்தைத் தனித்துப் பயணிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய்க்கு, கூட்டணியில் உள்ள இடதுசாரிகளின் இந்த நிலைப்பாடு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏற்கனவே விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் தவெக - காங்கிரஸ் மோதலால் எதிர்க்கட்சி வாக்குகள் சிதறி நரேந்திர மோடிக்குச் சாதகமாகிவிடும் என்று எச்சரித்து வந்தன. இப்போது, தேசிய அளவில் ராகுல் காந்தியின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு சிபிஎம் தலைமை ஆதரவு கரம் நீட்டியிருப்பது, 'பிரதமர் விஜய்' என்ற முழக்கத்திற்கு கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே முட்டுக்கட்டை போட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அதிகாரப்பூர்வ நிலைப்பாடு, விஜய்யின் 2029 தேசிய லட்சியங்களுக்குக் கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவருக்கே முன்னுரிமை: எம்.ஏ.பேபி பேட்டி
1996 ஜோதி பாசு நிகழ்வைச் சுட்டிக்காட்டிய கம்யூனிஸ்ட் தலைவர்
விஜய் பெயர் விவாதிக்கப்படுவது உண்மைதான்... ஆனால்
தவெகவின் தேசியக் கணக்குக்கு விழுந்த அடுத்த செக்!