டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் கடந்த 9 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, டெல்லி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
SIR விஷயத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் நடவடிக்கை தன்னிச்சையாக இருந்தாகவும், இதற்காக அவர் பதவி விலக வேண்டும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி, டெல்லி மற்றும் மும்பையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்களுடன் ராகுல் காந்தி பேரணி சென்றார். ஆனால், பேரணிக்கு அனுமதி கிடையாது என்று கூறி.. நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். இருப்பினும் போராட்டத்திலிருந்து ராகுல் காந்தி பின்வாங்கவில்லை. ஞானேஷ் குமாரை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார். காவல்துறை கறாராக அனுமதி மறுத்தது. இப்படியாக கடந்த 9 மணி நேரமாக ராகுல் காந்தி-டெல்லி போலீஸ் இடையே சலசலப்புகள் போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போது ராகுல் காந்தி மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி தலைவர்களை டெல்லி போலீஸ் கைது செய்திருக்கின்றனர். இந்த கைது நடவடிக்கை டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.