டெல்லி: பாஜகவில் சமீபத்தில் தான் புதிய தேசிய நிர்வாகிகள் குழு அறிவிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக தற்போது மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் புதிய பொறுப்புகளை பெற்ற அமைச்சர்கள், மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைய உள்ளவர்கள் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விலகி, அவர்களுக்குப் பதிலாக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இளம் தலைவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மத்திய அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 69 பேர் உள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 75(1A) பிரிவின்படி அதிகபட்சம் 81 பேர் வரை அமைச்சரவையில் இடம் பெறலாம். இதனால் தற்போது 12 இடங்கள் காலியாக உள்ளன என சொல்லலாம். ஏற்கனவே மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு அமைச்சரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இருப்பினும், அப்போது மாற்றம் செய்யப்படவில்லை.
இதற்கிடையே இப்போது அமைச்சரவை மாற்றப்பட்டு மோடி 3.0 அமைச்சரவை அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு தொடங்கி 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கும் நிலையில், அதை கருத்தில் கொண்டே மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வரும் அமைச்சர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையிலும் மாற்றம் இருக்கும் என தெரிகிறது சமீபத்தில் தான் மத்திய அமைச்சரவையில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில், சிறுபான்மையினர் விவகாரத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோரின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. அதேபோல பாஜகவில் புதிய பொறுப்புகளை பெற்ற அமைச்சர்களும் விரைவில் அமைச்சரவையில் இருந்து விலகக்கூடும் எனத் தெரிகிறது. டெல்லி மற்றும் உத்தர பிரதேச பாஜக மாநில தலைவர்களாக முறையே ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சமூக நீதி இணை அமைச்சர் பி.எல். வர்மா ஆகியோரின் தற்போதைய மாநிலங்களவை பதவிக்காலம் நவம்பரில் முடிவடைகிறது. இதனால் இவர்களும் பதவி விலகக்கூடும் என தெரிகிறது. இது தவிர பெர்பாரமன்ஸ் அடிப்படையிலும் சில அமைச்சர்கள் நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை எல்லாம் கருத்தில் கொண்டே அமைச்சரவை மாற்றம் இருக்கும். அமைச்சரவையில் யார் நீடிப்பது, யார் விலகுவது, புதிதாக யார் சேர்க்கப்படுவது என்பதில் வயதும் முக்கிய காரணமாக இருக்கலாம். 2024ல் மோடி 3.0 அமைச்சரவை பதவியேற்றபோது, 65 சதவீதத்துக்கும் அதிகமான அமைச்சர்கள் 51 முதல் 70 வயதுக்குள் இருந்தனர். தற்போது குறைந்தது 12 கேபினட் அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 70 வயதைக் கடந்துள்ளனர். 81 வயதான ஜிதன் ராம் மாஞ்சி தான் இப்போது மூத்த கேபினட் அமைச்சராக உள்ளார். 38 வயதான கே. ராம் மோகன் நாயுடு இளைய அமைச்சராக உள்ளார். இருவருமே கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். புதிய அமைச்சரவையில் இளம் அமைச்சர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு இப்போது 13 எம்பிக்கள் உள்ள நிலையில், அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே பெயரும் கேபினட் பதவிக்காக பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற 7 மாநிலங்களவை எம்பிக்கள் கொண்ட குழுவிலும் ஒருவருக்கு அமைச்சரவை பதவி கிடைக்கலாம் என தெரிகிறது.. இதேபோல் சிரோமணி அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி மீண்டும் உருவாகலாம் என்ற பேச்சும் உள்ளது. அப்படி நடந்தால் ஹர்சிம்ரத் கவுர் பாதலுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம். மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக கலகம் செய்து விலகிய திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் குழுவுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுகவும், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட என்டிஏ கூட்டணிக்குள் வரலாம் என்றும் அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. மேலும், தற்போது 14 அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வருகின்றனர். அமித் ஷா உள்துறை மற்றும் கூட்டுறவு துறைகளையும், ஜே.பி. நட்டா சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத்துறைகளையும் கவனிக்கிறார். சிவராஜ் சிங் சவுகான் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளை கவனிக்கிறார். இப்படி பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வருகிறார்கள். இதனால் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டால், அரசியல் கணக்குகள் மட்டுமின்றி அமைச்சர்களின் பணிச்சுமையையும் கருத்தில் கொண்டு இலாகாக்கள் மறுசீரமைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மோடி 3.0
யார் நீக்கப்படுவார்கள்?
வயது முக்கிய காரணம்!
யாருக்கு முக்கியத்துவம்!
உள்ளே வரும் திமுக?
பணிச்சுமை