டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்யக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் இருந்து டெல்லிக்கு பேரணியாக சென்று வரும் 10ம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ் உள்பட முக்கிய தலைவர்களை கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக கரப்பான்பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான சவ்ரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அரசு என்னையும், அபிஜித் (அபிஜித் திப்கே), அசுதோஷ், ரத்னா மற்றும் பிற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று அரசு நினைத்தால் அது தவறானது. ஏனென்றால் இளம் தலைமுறையினர் விழித்தெழுந்துவிட்டனர். நாங்கள் இருந்தாலும் இல்லவிட்டாலும் எங்களின் உரிமைகளுக்காவும், எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து போராடுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம். சிறை வாசத்தையோ அல்லது அதைவிட மோசமானதையோ எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருந்து இருக்கிறோம்.ஆனால் தற்போதைய திட்டம் பெரிய தவறாக இருக்ம். இதை ஒருபோதும் இளைஞர்கள் பொறுத்து கொள்ளமாட்டார்கள். போராட்டங்கள் தொடர வேண்டும். அக்டோபர் 10ம் தேதி முதல் மாபெரும் அளவில் மக்கள் திரள வேண்டும்'' என்று கூறியுள்ளார். முன்னதாக மகாத்மா காந்தி பிறந்தநாளான கடந்த 2ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மும்பையில் போராட்டம் நடத்தினர். SIR விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற 2 தேர்தல் ஆணையர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் இதே கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில் ஏராளமானவர்கள் திரண்டு ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் முடிவடைந்தது. ஆனாலும் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யவில்லை. இதையடுத்து அன்று இரவே ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அடுத்தக்கட்டமாக டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி நாடு முழுவதும் இருந்து பேரணி சென்று அங்கு அக்டோபர் 10ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அபிஜித் தீப்கே கூறியிருந்தார். டெல்லி ஜந்தர் மந்தர் செல்வதை போலீசார் தடுத்து நிறுத்தினால் அந்த இடமே ஜந்தர் மந்தர் ஆக மாற்றப்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தார். இந்நிலையில் தான் டெல்லி போராட்டத்துக்கு முன்பாகவே தங்களை கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.