யார் இந்த நிவேதா பால்ராஜ்? நடிகை பெயரில் கன்னிமாரா நூலகத்தில் போலி புத்தகங்கள்.. ராஜ்மோகன் கேள்வி!
சென்னை: கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்களை தவெக வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் தவெக பதிலடி கொடுத்துள்ளது. அதாவது கன்னிமாரா நூலகத்திலேயே நிவேதா பால்ராஜ் உள்ளிட்ட போலி பெயர்களில் புத்தகங்கள் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்..
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் ஏஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் போலி புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் திமுகவும் தவெகவும் மாறி மாறி குற்றச்சாடுகளை முன்வைத்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

அமைச்சர் ராஜ்மோகன்
இந்தச் சூழலில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், கன்னிமாரா நூலகத்தில் மேற்கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பிரபல நடிகையின் பெயரை போல 'நிவேதா பால்ராஜ்' என்ற பெயரில் பல புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலி புத்தகம்
இந்த விவகாரம் சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்மோகன், பிரபல ஆய்வாளர் ஜான் டெரிஸ் பெயரிலும் கூட போலி புத்ககங்கள் உள்ளதாக குறிப்பிடுகிறார். அமைச்சர் ராஜ்மோகன் மேலும், "சர்வதேச ஆய்வாளர் ஜான் டெரிஸ் மிகுந்த வேதனையுடன் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். என் வாழ்நாளில் எழுதாத ஒரு புத்தகத்தை, 2023ஆம் ஆண்டு நான் எழுதியதாக கூறி தமிழ்நாட்டில் உள்ள நூலகத்தில் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நூலகத்துறையில் ஏஐ மூலம் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த ஊழல் சர்வதேச அளவில் நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
'Democracy and People's Right in the Contemporary World' என்ற பெயரில் அவர் எழுதாத புத்தகத்தை.. அவரது பெயரை பயன்படுத்தி போலியாக உருவாக்கியுள்ளனர். அதை 2023 ஜூன் 25ம் தேதி கொள்முதல் செய்துள்ளனர். கடந்த 2023ல் மதுரையில் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அப்புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.
கன்னிமாரா நூலகம்
தவெக அரசு அமைந்த பிறகுதான் இந்த நூல்கள் அவசரமாக அச்சிடப்பட்டதா என்று சிலர் சந்தேகங்களை எழுப்புகின்றனர். கடந்த பிப்ரவரி மாதமே கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, அடுத்த ஏழு நாட்களிலேயே ஸ்டாக் பெற்றுள்ளனர் என்று விளக்கி இருந்தேன். இப்போது மேலும் சில உண்மைகள் தெரிய வந்துள்ளன. கன்னிமாரா நூலகத்தில் நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் 500க்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் உள்ளன. பல ஆண்டுகளாகவே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான நூல்களை இவர்கள் தொடர்ந்து பதிப்பித்து வந்துள்ளனர்.
நிவேதா பால்ராஜ்
ஒரு குறிப்பிட்ட பேட்டர்னை பின்பற்றி, சினிமா நடிகைகள் மற்றும் பிரபலங்களின் பெயர்களை நினைவுபடுத்தும் வகையில் ஆசிரியர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீரர் சச்சின் பெயரிலும், மறைந்த தலைவர் கருணாநிதி பெயரை மாற்றியும் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல நிவேதா பால்ராஜ் பெயரிலும் புத்தகம் இருக்கிறது. இதை கேட்டதும் பிரபலம் ஒருவரின் பெயரில் நினைவுக்கு வரலாம்.
இந்த நிவேதா பால்ராஜ் என்ற பெயரில் சட்டம், பொருளாதாரம், பாலின சமத்துவம், தொழில்நுட்பம், முதியோர் நலம், பெண்கள் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி எனப் பல துறைகளில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதே பெயரை சிறிது மாற்றி நிவேதா அன்பழகன், நிவேதா மோகன் பெயர்களில் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், பவித்ரா கருணாநிதி, பவுனாம்பாள் கருணாநிதி, கமலாம்பாள் கருணாநிதி பெயர்களிலும் புத்தகங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது கடந்த 2025ஆம் ஆண்டிலேயே முந்தைய அரசால் வாங்கப்பட்டவை" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
