டெல்லி: ஆப்பிளின் புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. காலை 8 மணிக்கு விற்பனை தொடங்கிய நிலையில், புதிய ஐபோனை வாங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர்கள் மற்றும் டீலர் கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்தனர்.
உலகிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் செல்போனாக ஐபோன்கள் தான் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு சாட்சியாகும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ரேம் சிக்கல் காரணமாக இந்தாண்டு வழக்கமான ஐபோன் மாடல் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே புதிய ஐபோன்களை வாங்க டெல்லி, நொய்டா, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் மற்றும் டீலர் கடைகளில் அதிகாலையிலேயே வாடிக்கையாளர்கள் வர தொடங்கினர். பெங்களூரில் உள்ள மால் ஆஃப் ஆசியாவில் செயல்படும் இமேஜின் ஆப்பிள் கடையின் முன்பும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இதன் மூலம் இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோ சீரிஸின் அதிகாரப்பூர்வ விற்பனை தொடங்கியுள்ளது. புதிய மாடல்களை முதல் நாளிலேயே வாங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பலர் ஆப்பிள் ஸ்டோர்களில் காத்திருந்து தங்களது போன்களை வாங்கிச் சென்றனர். அதிலும் இப்போது இஎம்ஐ முறை வந்துவிட்ட நிலையில், பலரும் ஐபோன்களை எளிதாக வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோவின் 256GB மாடல் ரூ.1,64,900 முதல் விற்பனை செய்யப்படுகிறது. 512ஜிபி மாடல் ரூ.1,89,900க்கும், 1TB மாடல் ரூ.2,39,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டாப்-எண்ட் 2TB மாடலின் விலை ரூ.3,14,900 ஆகும். ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் 256GB மாடலின் ஆரம்ப விலை ரூ.1,79,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு ப்ரோ மாடல்களும் சிவப்பு, வெள்ளை, சில்வர், கறுப்பு ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கின்றன. இதில் சிவப்பு நிறம் அதிக கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 18 ப்ரோ சீரிஸின் முக்கிய ஹார்ட்வேர் மேம்பாடுகளில் ஒன்று புதிய A20 ப்ரோ சிப்செட் ஆகும். மேலும், டைனமிக் ஐலாண்ட் அளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், அதில் கூடுதல் வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஐபோன் 18 ப்ரோவில் 6.3 இன்ச் டிஸ்ப்ளேவும், ஐேபோன் 18 ப்ரோ மேக்ஸில் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவும் இடம் பெற்றுள்ளன. முந்தைய தலைமுறை ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களிலும் இதே டிஸ்ப்ளே அளவுகளே இருந்தது குறிப்பிடத்தக்கது.. கேமராவை பொறுத்தவரை, இரண்டு போன்களிலும் மூன்று பின்புற கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. இதில் வேரியபல் அபச்சர் வசதியுடன் 48MP புஷன் பிரதான கேமரா, 48MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 48MP அல்ட்ரா வைட் கேமரா ஆகியவை உள்ளன. மேலும், புதிய சிரி திறன்கள் மற்றும் Apple Intelligence வசதிகளுக்கும் ஆப்பிள் முக்கியத்துவம் அளித்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐபோன் 18 ப்ரோ 24 மணி நேரம் வரையிலும், ப்ரோ மேக்ஸ் சுமார் 30 மணி நேரம் சார்ஜ் நிற்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே ஆப்பிள் ஸ்டோர்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. வரும் நாட்களிலும் இந்த ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.கூட்டம்
ஐபோன் ரேட்
டிஸ்பிளே
கேமரா