தேசிய அளவில் முக்கிய பொறுப்பை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி.. யார் இந்த வெங்கடேசன்?

  • டெல்லி: பாஜகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய அளவில் 65 பாஜக நிர்வாகிகளை மாற்றம் செய்து அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் எம். வெங்கடேசன் பாஜகவின் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். யார் இவர்?

    Advertisement

    பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்ட பிறகு அகில இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றம் நடந்துள்ளது.

    Advertisement

    யார் இந்த வெங்கடேசன்?

    விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ம.வெங்கடேசன். சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவர் எழுத்தாளரும் கூட.

    ம.வெங்கடேசன் இந்துத்துவா சிந்தனையில் திராவிட அரசியலுக்கு எதிராக பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 'இந்துத்துவா அம்பேத்கர்', 'எம்.ஜி.ஆர் என்கிற இந்து', 'பெரியாரின் மறுபக்கம்', 'தலித்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி' உள்ளிட்ட நூல்கள் இவர்கள் எழுதியவை.

    ஆணைய தலைவர்

    கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக ம.வெங்கடேசன் செயல்பட்டு வந்தார். ம.வெங்கடேசன் கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் 2022 மார்ச் வரை பதவி நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2023ல் மீண்டும் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

    Advertisement

    ஒரு அமைச்சருக்கு இணையான அந்தஸ்து பெற்ற இந்த ஆணையத் தலைவர் பதவிக்கு அரசு கார், போலீஸ் பாதுகாப்பு, நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் எந்த மாவட்டத்திலும் சென்று தூய்மை பணியாளர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்கிற அதிகாரம், ஆளுநர், கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்கிற அதிகாரம் இந்த பதவிக்கு உண்டு.

    பாஜகவில் முக்கிய பொறுப்பு

    சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரியில், பாஜகவின் தமிழக சட்டமன்றத் தேர்தல் மேலாண்மைக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் தற்போது, எம். வெங்கடேசன் பாஜகவின் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் 65 நிர்வாகிகளை நியமனம் செய்து அகில இந்திய தலைமை அறிவித்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு தமிழக நிர்வாகி ம.வெங்கடேசன் தான்.

    Advertisement

    நயினார் நாகேந்திரன் வாழ்த்து

    வெங்கடேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "நம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நம் தமிழகத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய ம. வெங்கடேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலிலும், நம் தேசிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நித்தின் நபின் தலைமையிலும் அவர் இந்த புதிய பொறுப்பில் தொடர்ந்து மக்கள் நலப் பணியில் சிறந்து விளங்கவும் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடவும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Sweeping organizational changes have been implemented within the BJP. The party's National General Secretary, Arun Singh, has issued orders reshuffling 65 office-bearers at the national level. M. Venkatesan from Tamil Nadu has been appointed as a National Secretary of the BJP. Who is he?