பாகிஸ்தானின் கச்சா எண்ணெய் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்! இந்திய பெருங்கடலில் திக்திக் சம்பவம்
மொகடிஷூ: இந்திய பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தானின் கச்சா எண்ணெய் கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் இடைமறித்து கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக சோமாலியா கடற்கொள்ளையர்களின் தொல்லை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தொடங்கி இருப்பது கடல்சார் வணிக கப்பல்களில் பணியாற்றுவோருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சோமாலியா நாட்டின் பெர்பெரா துறைமுகத்தில் இருந்து சோமாலியா தலைநகர் மெகாடிஷூ நோக்கி கச்சா எண்ணெய் கப்பல் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தது. வர்த்தக பணிக்காக சோமாலியாவின் உள்ளூர் வர்த்தகர்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கப்பல் சோமாலியாவையொட்டிய இந்திய பெருங்கடலில் பயணித்தது. அப்போது சோமாலியா நாட்டின் கடற்கரை நகரமாக ஹஃப்யூன் (Hafun) மற்றும் பண்டர்பெய்லா (Bandarbeyla) ஆகிய நகரங்களுக்கு இடையே கப்பல் சென்றபோது ஒரு கும்பல் இடைமறித்தது.
சிறிய படகில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் அந்த கப்பலை இடைமறித்ததோடு, கப்பலில் ஏறி அனைவரையும் மிரட்டியது. அதோடு கப்பலை கடத்தியது. இதனை, பிரிட்டிஷ் ராணுவத்தின்UKMTOவும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி ,''இந்தக் கப்பலை சிலர் கடத்தி கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சோமாலியாவின் நீர்ப்பரப்பு எல்லையில் தெற்கு நோக்கி கப்பல் செல்கிறது'' என கூறப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் எத்தனை ஊழியர்கள் இருந்தனர்? அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. கப்பலையும், கப்பலில் உள்ளவர்களையும் மீட்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்தும்போது குறிப்பிட்ட தொகையை கேட்பார்கள். அதனை கொடுத்துவிட்டால் கப்பலை திரும்ப ஒப்படைத்துவிடுவார்கள். ஆனால் தற்போது வரை கடத்தல்காரர்களிடம் இருந்து அப்படியான எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கடற்படைகளின் ரோந்துப் பணிகள் மற்றும் மேம்பட்ட கடல்சார் பாதுகாப்பு சார் நடவடிக்கையால் சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் கப்பல்கள் சிக்குவது கணிசமான அளவில் குறைந்துள்ளது. ஆனால் தற்போது இந்த சம்பவம் நடந்து இருப்பது மீண்டும் கப்பல் துறையில் உள்ளவர்களை அச்சப்படுத்தும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications