மதுரை: அக்டோபர் 30ல் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு எப்படியாவது முதல்வர் விஜய்யை அழைத்து வந்துவிட வேண்டும் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தீவிரமாக முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதன் மூலமாக முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை கைப்பற்ற முடியும் என்று தவெக தலைமை கணக்கு போடுகிறது.
அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவை நடத்துதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதற்கு முன்பாக மருது பாண்டியர் குருபூஜை விழாவும் நடக்க இருக்கிறது. இந்த தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் விஜய்யை பசும்பொன் அழைத்து வந்துவிட வேண்டும் என்று தவெக தரப்பு முனைப்புடன் இருக்கிறது. முதற்கட்டமாக தேவர் ஜெயந்தியில் பங்கேற்கும் முடிவில் தான் விஜய்யும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பசும்பொன்னுக்கு நேரில் வந்து முதல்வர் விஜய் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினால், அது முக்குலத்தோர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எடுபடும். ஏற்கனவே வேலு நாச்சியாரை தவெகவின் கொள்கைத் தலைவராக அறிவித்திருக்கிறார். அதற்கேற்ப முத்துராமலிங்கத் தேவருக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினால், அது தவெகவின் வளர்ச்சிக்கும் உதவும். ஏனென்றால் பெரும்பாலான முக்கலத்தோர் சமூக மக்கள் திமுக மற்றும் அதிமுகவில் இருந்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெல்ல வேண்டுமென்றால், முக்குலத்தோர் சமூக ஆதரவு அவசியமானது. ஆனால் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றால், இம்மானுவேல் சேகரனார் குருபூஜையில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி உருவாகும். விஜய்க்கு தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் ஆதரவு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. வட மாவட்டங்களில் இருக்கும் தலித் மக்களின் வாக்குகள் கிடைத்தாலும், தென் மாவட்டங்களில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இருப்பினும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு எப்படியாவது முதல்வர் விஜய்யை அழைத்து வந்துவிட வேண்டும் என்பதில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தீவிரமாக இருக்கிறார். இதன் மூலமாக தென் மாவட்டங்களில் சிடிஆர் நிர்மல் குமாரின் செல்வாக்கு உயரும் என்று கணக்கு போடுகிறார். அதேபோல் முக்குலத்தோர் சமூக மக்களின் பிரதிநிதியாக உருவாகிடலாம் என்றும் கணக்கு போடுவதாக தெரிகிறது. இதனால் சிடிஆர் நிர்மல் குமாரின் கணக்கு எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.